வடமதுரை ரெயில் நிலையத்தை தரம் உயர்த்தக்கோரி ரெயிலை மறித்த கிராம மக்கள் 73 பேர் கைது


வடமதுரை ரெயில் நிலையத்தை தரம் உயர்த்தக்கோரி ரெயிலை மறித்த கிராம மக்கள் 73 பேர் கைது
x
தினத்தந்தி 4 Dec 2017 3:15 AM IST (Updated: 4 Dec 2017 12:14 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்–விழுப்புரம் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி தொடங்கியபோது, வடமதுரை ரெயில் நிலையத்தை தரம் குறைக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டது.

வடமதுரை,

திண்டுக்கல்–விழுப்புரம் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி தொடங்கியபோது, வடமதுரை ரெயில் நிலையத்தை தரம் குறைக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தினர்.

இதையடுத்து வடமதுரை ரெயில் நிலையத்தை முழுமையான ரெயில் நிலையமாக தக்க வைக்க பணிகள் நடந்து வந்தன. ஆனால் ரெயில்வே நிர்வாகம் 2 துணை பாதைகளை அமைக்காமல், அருகருகே 2 நடைமேடைகளை மட்டும் அமைக்க திட்ட மாறுதல் செய்தது. இதனால் 2 துணை பாதைகளுடன் மற்றொரு நடைமேடை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தினர். ஆனால் ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் வடமதுரை ரெயில் நிலையத்தை துணைப்பாதைகளுடன் கூடிய முழுமையான ரெயில் நிலையமாக தரம் உயர்த்தக்கோரி வடமதுரையில் நேற்று கடை அடைப்பு போராட்டம் நடந்தது. மேலும் வேடசந்தூர் எம்.எல்.ஏ. பரமசிவம் உள்பட பொதுமக்கள் ஏராளமானோர் ரெயில் மறியல் செய்ய காணப்பாடி சாலையில் வடமதுரை ரெயில் நிலையம் நோக்கி நடந்து சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் பொதுமக்களை தடுத்து நிறுத்தி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையில் மற்றொரு பாதை வழியாக சென்ற பொதுமக்கள், கையில் சிவப்பு கொடிகளுடன் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு சென்ற போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் 20 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதற்கிடையே மறியலில் ஈடுபட்டதாக 73 பேரை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.


Next Story