மீன்பிடிக்க சென்றபோது மாயமான மீனவர்களை மீட்ககோரி கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் போராட்டம்
கேரளாவுக்கு மீன்பிடிக்க சென்றபோது மாயமான கடலூர் மீனவர்களை மீட்டு தரக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்,
‘ஒகி’ புயல் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. கடலுக்கு மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மற்றும் கேரள பகுதி மீனவர்கள் புயலில் சிக்கி மாயமாகி உள்ளனர். இவர்களில் சிலர் கடற்படை மற்றும் கடலோர காவல்படை மூலம் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் சில மீனவர்களின் உடல் கரை ஒதுங்கியது.
குறிப்பிட்ட நாளில் மீனவர்கள் கரைக்கு திரும்பாததாலும், அவர்களை பற்றி எந்தவொரு தகவல் இல்லாததாலும் அவர்களது குடும்பத்தினர் பதற்றத்தில் உள்ளனர். புயலில் சிக்கி மாயமான மீனவர்களை மீட்கும் பணியில் கடற்படை கப்பல்கள், கடலோர காவல்படையை சேர்ந்த கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இதற்கிடையே கூலி தொழிலுக்காக கன்னியாகுமரி, கேரளா போன்ற பகுதிகளுக்கு மீன்பிடிக்க சென்ற கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 21 பேர் புயலில் சிக்கி இருப்பதாகவும் அவர்களில் 8 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் நேற்று முன்தினம் தகவல் வெளியானது. ஆனால் மற்ற மீனவர்களின் கதி என்ன? என்று தெரியாமல் உள்ளது.
இந்த நிலையில் ராசாப்பேட்டை மற்றும் சோனங்குப்பம் கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் 30 பேர் நேற்று கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து ஒப்பாரி வைத்து போராட்டம் செய்தனர். அப்போது கடலில் மீன் பிடிக்க சென்று மாயமான மீனவர்களை மீட்கக்கோரி கோஷங்களை எழுப்பினர்.
அப்போது ஒரு பெண் திடீரென மயங்கி விழுந்ததார். உடனே அங்கு நின்றவர்கள் அந்த பெண்ணின் முகத்தில் தண்ணீர் தெளித்தனர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த பெண் எழுந்தார். போராட்டத்தின் போது பெண் மயங்கி விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டம் குறித்து மீனவர்கள் கூறியதாவது:–
ராசாப்பேட்டை, சோனாங்குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த 22–ந் தேதி தின கூலி அடிப்படையில் மீன்பிடி தொழிலுக்காக பஸ்சில் கேரளாவுக்கு சென்றனர். கேரளாவில் இருந்து அவர்கள் 24–ந் தேதி உள்ளூர் மீனவர்களுடன் படகில் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது ஒகி புயலின் தாக்குதலில் சிக்கி தவித்துள்ளனர்.
இதில் உள்ளூர் மீனவர்கள் 3 பேர் கடலில் நீந்தி கரைக்கு வந்து தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பிறகுதான் எங்களுக்கு தகவல் கிடைத்தது. ஆனால் இதுவரை மீனவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை? எனவே கடலில் மாயமான மீனவர்களை கண்டுபிடித்து தரக்கோரி இங்கு வந்தோம். தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்து மாயமன மீனவர்களை மீட்டுதர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.