கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வாயில் கருப்புத்துணி கட்டியபடி மனு அளிக்க வந்த மருத்துவ மாணவர்கள்
கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு முதுகலை மருத்துவ மாணவ–மாணவிகள் வாயில் கருப்புத்துணி கட்டியபடி ஊர்வலமாக வந்து நேற்று மனு அளித்தனர்.
கோவை,
கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் கோவை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் கடந்த 5 நாட்களாக கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடு பட்டு வந்த முதுகலை மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பினர் நேற்று வாயில் கருப்புத்துணி கட்டிய படி கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜெயராஜா, டாக்டர் சுரேஷ் உள்ளிட்டோர் கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:–
மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியம் தற்போது உள்ள நடைமுறைக்கு மாறாக கடந்த மாதம் டாக்டர்களை தேர்வு செய்து பணி நியமனம் வழங்கி உள்ளது. இதில் இடஒதுக்கீடு முறையும் பின்பற்றப் பட வில்லை. எனவே இந்த பணி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். அரசு முதுகலை மருத்துவ மாணவர்களுக்கும், அரசு மருத்துவர்களுக்கும் பணி நியமனத்தின் போது முன்னூரிமை அளிக்க வேண்டும். எங்களது கோரிக்கை நிறைவேற்ற வலியுறுத்தி கோவை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் கடந்த 5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டோம். எங்களது கோரிக்கை ஏற்படாத பட்சத்தில் சென்னையில் உள்ள மருத்துவ இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
சிங்காநல்லூரை சேர்ந்த புவனேஸ்வரி அளித்த மனுவில், எனது மகன் நந்தகுமார், அவரது நண்பர் கார்த்திக் ஆகியோர் கடந்த 2.3.17 அன்று மோட்டார் சைக்கிளில் கோவை–பொள்ளாச்சி சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் எனது மகன் நந்தகுமார் உயிரிழந்தார், அவரது நண்பர் கார்த்திக்கின் கால் துண்டானது.
இந்த விபத்தை ஏற்படுத்த வாகனத்தை இதுவரை போலீசார் கண்டுபிடிக்கவில்லை. இதனால் நாங்கள் இழப்பீடு கோர முடியாத நிலை உள்ளது. எனது கணவரும் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். எனது நிலையை கருத்தில் கொண்டு விபத்து ஏற்படுத்திய வாகனத்தை உடனடியாக கண்டுபிடிக்க போலீசாருக்கு உத்தரவிடுவதுடன், எங்களுக்கு உரிய இழப்பீடும் பெற்று தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
அருந்ததியர் முன்னேற்ற கழக தலைவர் மணியரசு தலைமையில் பாப்பம்பட்டியை சேர்ந்த பெண்கள் அளித்த மனுவில், சூலூர் பகுதியில் உள்ள பாப்பம்பட்டி, இடையர்பாளையம் பகுதியில் ஏராளமான ஆதிதிராவிட குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க கோரி பல முறை மனு அளித்து உள்ளோம். பாப்பம்பட்டி பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் எங்க ளுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்று கூறப்பட்டு உள்ளது.
சமூக விழிப்புணர்வு இயக்க தலைவர் சாக்ரடீஸ் அளித்த மனுவில், கோவையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு முரணாக முன்னாள் முதல்–அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.