மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நாற்று நடும் போராட்டம்


மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நாற்று நடும் போராட்டம்
x
தினத்தந்தி 5 Dec 2017 3:15 AM IST (Updated: 5 Dec 2017 1:08 AM IST)
t-max-icont-min-icon

மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நாற்று நடும் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் மாநகராட்சி 5–வது வார்டுக்குட்பட்ட சவுபாக்யா நகரில் பல வீதிகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்க்கு போதிய வடிகால் வசதி இல்லை. இதனால் சாக்கடை கால்வாயின் முடிவில் தரைமட்ட தொட்டி கட்டப்பட்டு கழிவுநீர் தேங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கழிவுநீரை 2 நாட்களுக்கு ஒரு முறை மாநகராட்சி நிர்வாகம் லாரி மூலம் அப்புறப்படுத்தி வந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் கழிவுநீர் தொட்டி நிரம்பி வீடுகளுக்குள் புகுந்ததாக கூறப்படுகிறது. இதனால், இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும், குடிநீரை வீணாக்கும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அனுப்பர்பாளையம் மெயின் ரோட்டில் நாற்று நடும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்காக ஆத்துப்பாளையம் ரோட்டில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் ரங்கராஜ், சுப்பிரமணி, பெரியசாமி, முத்துக்குமார், ஆறுமுகம், உமாநாத் மற்றும் பொதுமக்கள் தாரை, தப்பட்டை முழங்க கொடிகளை ஏந்தியும், நெல் நாற்றுகளை தலையில் சுமந்தபடியும் அனுப்பர்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்த 15வேலம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கலையரசி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஊர்வலமாக சென்றவர்களை தடுத்து நிறுத்தி, ரோட்டில் நாற்று நட அனுமதி கிடையாது என்று கூறினார்கள். பின்னர், போராட்டம் நடத்த வந்தவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து, பொதுமக்களுடன் சம்பந்தப்பட்ட இடத்தை போலீசார் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது, மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி உங்கள் பகுதியில் உள்ள பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண ஏற்பாடு செய்வதாக போலீசார் தெரிவித்தனர். அதன்காரணமாக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story