ஆன்லைன் பதிவுமுறை முன்னோட்ட அடிப்படையிலேயே அமலில் உள்ளது: நேரடி பத்திரப்பதிவை அதிகாரிகள் மறுக்கக்கூடாது
ஆன்லைன் பதிவுமுறை முன்னோட்ட அடிப்படையிலேயே அமலில் உள்ள காரணத்தால் நேரடி பத்திரப்பதிவை அதிகாரிகள் மறுக்கக்கூடாது என்று பதிவுத்துறை அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த சங்கரலிங்கம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் பதிவுத்துறை பணியாளர்களுக்கு முறையாக பயிற்சி அளித்த பிறகு ஆன்லைன் பதிவு முறையை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். அதுவரை ஆன்லைன் பத்திரப்பதிவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை முடிவடைந்தநிலையில் நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து கடந்த செப்டம்பர் 19–ந்தேதி உத்தரவிட்டனர். அந்த வழக்கின் தீர்ப்பு இன்று பிறப்பிக்கப்பட்டது.
அதில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:–
பதிவுத்துறையில் தொழில்நுட்ப வசதியை அறிமுகம் செய்வது என்பது முக்கியமான ஒன்றாகிவிட்டது. தொடக்கத்தில் சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். இந்த சிக்கல்கள் கவனத்தில் வரும்போது அவற்றை உடனடியாக சரிசெய்ய வேண்டியது பதிவுத்துறை அதிகாரிகளின் கடமை. ஆன்லைன் பத்திரப்பதிவு முறையை பின்பற்றுவதில் உள்ள சிரமங்கள் பற்றி கவனத்துக்கு வந்த உடனேயே அதை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆன்லைன் பதிவுமுறையானது முன்னோட்ட அடிப்படையில் மட்டும் தற்போது அமலில் இருப்பதால் நேரடி பத்திரப்பதிவை அதிகாரிகள் மறுக்கக்கூடாது. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல் மதிப்பின்படி முத்திரைத்தாள் கட்டணத்தை செலுத்தினால் தான் பதிவை மேற்கொள்ள முடியும் என்று கட்டாயப்படுத்தி பத்திரப்பதிவு ஆவணங்களை வாங்குவதற்கு பதிவுத்துறை அதிகாரிகள் மறுக்கக்கூடாது.
பதிவு செய்யப்படும் சொத்து, சொத்துக்கு உரிமைப்பட்டவர்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை இணையதளத்தில் (இன்டெக்ஸ் கிரியேஷன்) பதிவேற்றம் செய்வது சார்–பதிவாளரின் கட்டாயப்பணியாகும். இந்த பணியை பத்திர எழுத்தர்களிடமோ, வேறுநபர்களிடமோ ஒப்படைக்கக்கூடாது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.