பிரதாப் சிம்ஹா எம்.பி. பேசிய வீடியோவால் புதிய சர்ச்சை விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்படும் என எடியூரப்பா பேட்டி


பிரதாப் சிம்ஹா எம்.பி. பேசிய வீடியோவால் புதிய சர்ச்சை விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்படும் என எடியூரப்பா பேட்டி
x
தினத்தந்தி 5 Dec 2017 4:48 AM IST (Updated: 5 Dec 2017 4:48 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் அரசுக்கு போராட்டத்தால் நெருக்கடி கொடுக்கும்படி அமித்ஷா கூறியதாக பிரதாப் சிம்ஹா எம்.பி. பேசிய வீடியோவால் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு,

மைசூரு மாவட்டம் உன்சூரில் தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற இந்து அமைப்பினரை நேற்று முன்தினம் போலீசார் தடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த பிரதாப் சிம்ஹா எம்.பி. தனது காரில், போலீசார் அமைத்திருந்த தடுப்பு வேலிகளை இடித்துதள்ளிவிட்டு சென்றார். அவரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை விடுவித்தனர்.

இந்த நிலையில் பிரதாப் சிம்ஹா எம்.பி. பேசிய வீடியோ ஒன்று முகநூலில் வைரலாக பரவி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:–

பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கர்நாடக அரசுக்கு எதிராக தீவிரமாக போராட்டம் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இதுவரை நடந்த பா.ஜனதா போராட்டத்தின் போது போலீசார் தடியடி நடத்தி உள்ளார்களா? கண்ணீர் புகை குண்டு வீசியுள்ளார்களா? என கேட்டார். அதற்கு பா.ஜனதா சார்பில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி உள்ளோம். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று நான் அவரிடம் தெரிவித்தேன்.

அதற்கு அமித்ஷா, கர்நாடக அரசுக்கு எதிராக மிகதீவிரமாக போராட வேண்டும். இதில் பா.ஜனதா இளைஞர் அணியினர் வீரியமுடன் போராட வேண்டும். அதன்மூலம் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று கூறியதாக பிரதாப் சிம்ஹா எம்.பி. கூறியுள்ளார்.

இந்த வீடியோ புதிய சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுபற்றி காங்கிரசார் கூறுகையில், பா.ஜனதாவின் தேசிய தலைவரான அமித்ஷாவே கர்நாடகத்தில் வன்முறையில் ஈடுபடும் படி பா.ஜனதாவினருக்கு கூறியுள்ளார். இதனால் தான் நேற்று முன்தினம் சிக்கமகளூரு தத்தா ஜெயந்தி விழாவிலும், உன்சூர் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்திலும் வன்முறையை பா.ஜனதாவினர் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது என்றனர்.

இந்த வீடியோ பற்றி பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா கூறுகையில், ‘அமித்ஷா அப்படி கூறி இருக்க வாய்ப்பு இல்லை. இந்த விவகாரம் பற்றி பிரதாப் சிம்ஹா எம்.பி.யிடம் கட்சி சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்படும்‘ என்றார்.

இதுகுறித்து ஜனதாதளம் (எஸ்) கட்சி மாநில தலைவர் குமாரசாமி கூறுகையில், ‘ஒரு எம்.பி.யே இவ்வாறு கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த விவகாரம் பற்றி போலீசார் தாமாக முன்வந்து பிரதாப் சிம்ஹா எம்.பி. மீது ஜாமீனில் வெளிவராத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்’ என்றார்.


Next Story