திருச்சி மாநகர், புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு


திருச்சி மாநகர், புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு
x
தினத்தந்தி 6 Dec 2017 4:15 AM IST (Updated: 5 Dec 2017 11:31 PM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாநகர், புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

திருச்சி,

தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மேலரண் சாலையில் உள்ள அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அலுவலகம் முன் நேற்று ஜெயலலிதா படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.

அந்த படத்திற்கு மாநகர் மாவட்ட நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர். ஏராளமான பொதுமக்களும் இதில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இதில் பங்கேற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதே போல் திருச்சி தில்லைநகரில் உள்ள புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் டி. ரத்தினவேல் எம்.பி. அலுவலகம் முன் ஜெயலலிதா உருவபடம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், ஊராட்சி, கிளை கழக செயலாளர்கள் கலந்து கொண்டு ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். புறநகர் மாவட்டத்தில் அந்தந்த பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்றிய செயலாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.


Next Story