பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி திருச்சியில் பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார் குவிப்பு


பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி திருச்சியில் பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார் குவிப்பு
x
தினத்தந்தி 6 Dec 2017 4:30 AM IST (Updated: 5 Dec 2017 11:31 PM IST)
t-max-icont-min-icon

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி திருச்சியில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். விமான நிலையத்தில் பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது.

திருச்சி,

டிசம்பர் மாதம் 6–ந்தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க நாடு முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். அதன்படி இன்று (புதன்கிழமை) பாதுகாப்பு பணிக்காக திருச்சி மாநகர போலீஸ் கமி‌ஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், மாநகரில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இவர்கள் மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று மாலை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட போலீசார் மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ் நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் முக்கிய இடங்களில் தீவிர சோதனை நடத்தினர். பஸ் நிலையங்களில் சந்தேகப்படும்படியான நபர்களை பிடித்து விசாரித்தனர். கார், வேன், மோட்டார் சைக்கிள் என அனைத்து வாகனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

திருச்சி ரெயில் நிலையத்தில் ரெயில் நிலைய போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர், உள்ளூர் போலீசார் என 100–க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள் ரெயில் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர்.

அதேபோன்று திருச்சி விமான நிலையத்திலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் மோப்பநாய் உதவியுடன் பயணிகளின் உடைமைகளில் தீவிர சோதனை செய்த பிறகே விமான நிலையத்திற்கு உள்ளே அனுமதித்தனர். இதனால் விமான நிலையம், ரெயில் நிலையம், பஸ் நிலையங்களில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story