புதிய கல் குவாரிகளுக்கு உரிமம் வழங்க தடைவிதிக்ககோரி விவசாயிகள் தர்ணா போராட்டம்
புதிய கல் குவாரிகளுக்கு உரிமம் வழங்க தடைவிதிக்ககோரி இரும்பாளி குளத்தில் அமர்ந்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நார்த்தாமலை,
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா இரும்பாளி கிராமத்தில் பல கல்குவாரிகள் உள்ளன. இந்த குவாரிகளிலிருந்து கிரானைட் கற்கள் தொடர்ந்து வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் குவாரிகளின் ஆழம் 200 அடிக்கும் அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்துவிட்டது. மேலும் பாசன கிணறுகள் நீர் ஊற்று குறைந்து வறண்டு விட்டது.
மேலும் கல் குவாரிகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், மண் ஆகியவற்றை பாசன குளங்கள், வரத்துவாரிகள், நீர்ப்பிடிப்புப் பகுதிகள், அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் சாலை ஓரங்கள் ஆகிய இடங்களில் கொட்டப்பட்டு வருகிறது.
எனவே இரும்பாளி கிராமத்தில் உள்ள கல் குவாரிகளால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இரும்பாளி பகுதி விவசாயிகள் நேற்று இப்பகுதியில் கல் குவாரிகள் விதிமுறைப்படி இயங்குகிறதா என கண்காணிக்க வேண்டும், புதிய கல்குவாரிகளுக்கு உரிமம் வழங்க தடைவிதிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரும்பாளி கிராமத்தில் உள்ள குளத்தில் விவசாயிகள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த வெள்ளனூர் போலீசார் மற்றும் இரும்பாளி கிராமநிர்வாக அதிகாரி கல்பனா ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.