போலீசார் தாக்கியதில் இறந்ததாக புகார்: ஆட்டோ டிரைவரின் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டம்


போலீசார் தாக்கியதில் இறந்ததாக புகார்: ஆட்டோ டிரைவரின் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 6 Dec 2017 3:30 AM IST (Updated: 6 Dec 2017 1:09 AM IST)
t-max-icont-min-icon

போலீசார் தாக்கியதில் இறந்ததாக கூறி ஆட்டோ டிரைவரின் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இடுக்கி,

இடுக்கி மாவட்டம் தொடுபுழாவை சேர்ந்தவர் ரதீஷ் (வயது 32). ஆட்டோ டிரைவர். இவர் அந்த பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து அந்த பெண் சார்பாக தொடுபுழா போலீசில் புகார் செய்யப்பட்டது.

அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்துவதற்காக ரதீசை போலீசார், அழைத்து சென்றனர். பின்னர் போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தினர். அதேபோல் அந்த இளம்பெண்ணையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் இளம்பெண்ணை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து ரதீசையும் போலீசார் அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை நடத்தியதால் மனமுடைந்து காணப்பட்ட ரதீஸ், வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் ரதீசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தொடுபுழா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே ரதீஷ், போலீஸ் தாக்கியதில் தான் இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். பின்னர் பிரேத பரிசோதனை செய்து ஒப்படைக்கப்பட்ட ரதீசின் உடலை உறவினர்கள் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று போராட்டம் நடத்த முடிவு செய்து ஊர்வலமாக கொண்டு செல்ல முயன்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மருத்துவமனை முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் பிணத்தை ஊர்வலமாக எடுத்து செல்லவிடாமல் போலீசார் தடுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் பிணத்தை சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தொடுபுழா போலீஸ் துணை சூப்பிரண்டு மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ரதீசை போலீசார் தாக்கியது உண்மை என்று தெரியும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட ரதீசின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு உடலை எடுத்து சென்று அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் காரணமாக தொடுபுழா–அடிமாலி சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story