இ.எஸ்.ஐ. மருத்துவ மைய மருந்தாளுனர் கொலை வழக்கில் மனைவி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை
இ.எஸ்.ஐ. மருத்துவ மைய மருந்தாளுனர் கொலை வழக்கில் மனைவி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
ஈரோடு,
ஈரோடு அருகே மேல் திண்டல் பகுதியை சேர்ந்தவர் தங்கவேலு. இவருடைய மகன் சீனிவாசன் (வயது 40). மாற்றுத்திறனாளியான இவர் ஈரோடு இ.எஸ்.ஐ.(தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகம்) மருத்துவ மையத்தில் மருந்தாளுனராக வேலை பார்த்து வந்தார்.
இவருடைய மனைவி லலிதா குமாரி (36). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சீனிவாசனுக்கும், லலிதா குமாரிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். அப்போது லலிதா குமாரி கணவர் சீனிவாசனிடம் கோபித்துக்கொண்டு குமாரபாளையத்தில் உள்ள அக்காள் யசோதா (38) என்பவரின் வீட்டுக்கு சென்று விடுவார். பின்னர் சமாதானம் அடைந்து மீண்டும் வந்து சீனிவாசனுடன் குடும்பம் நடத்தி வந்தார்.
இந்தநிலையில் கடந்த 2012–ம் ஆண்டு நவம்பர் மாதம் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. வழக்கம்போல லலிதாகுமாரி கோபித்துக்கொண்டு அக்காள் வீட்டுக்கு சென்றார். பின்னர் பெரியவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது சீனிவாசன், தனது பெற்றோர் கால்களில் விழுந்து லலிதாகுமாரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்.
ஆனால் இதற்கு லலிதாகுமாரி மறுத்தார். இந்தநிலையில் அவரது அக்காள் யசோதாவின் கணவர் கோபாலகிருஷ்ணனின் தந்தை மன்னிப்பு கேட்டதாக தெரிகிறது. இது கோபாலகிருஷ்ணனுக்கும், யசோதாவுக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இது சீனிவாசன் மீது கொலை வெறியாக மாறியது. கடந்த 17–11–2012 அன்று இரவு மேல்திண்டலில் உள்ள வீட்டில் சீனிவாசன் டி.வி. பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு கோபாலகிருஷ்ணன், யசோதா ஆகியோர் வந்தனர். அவர்கள் லலிதா குமாரியின் உதவியுடன் சீனிவாசனை தாக்கியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தனர்.
பின்னர் வீட்டில் இருந்த 23½ பவுன் நகையை எடுத்துக்கொண்டு கோபாலகிருஷ்ணனும், யசோதாவும் தப்பிச்சென்றனர். சிறிது நேரத்தில், லலிதாகுமாரி சத்தமிட்டு கதறியபடியே வெளியே ஓடிவந்தார். அக்கம்பக்கத்தினரிடம் வடமாநிலத்தை சேர்ந்த 4 பேர் வந்து கணவர் சீனிவாசனை கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றதாக நடித்தார்.
இதுபற்றிய தகவல் அறிந்த ஈரோடு தாலுகா போலீசார் சம்பவ இடம் சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது சீனிவாசனை கொலை செய்து விட்டு லலிதாகுமாரி, யசோதா, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நாடகமாடியதை கண்டுபிடித்தனர். அதைத்தொடர்ந்து மனைவி லலிதா குமாரி உள்பட 3 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும், இது தொடர்பாக ஈரோடு 2–வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி ராமகிருஷ்ணன் விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார்.
அந்த தீர்ப்பில், சீனிவாசனை திட்டமிட்டு கொலை செய்த குற்றத்துக்காகவும், வீட்டில் இருந்த தங்க நகைகளை எடுத்துச்சென்று மறைத்த குற்றத்துக்காகவும், கொலை செய்து விட்டு அதை மறைக்க நாடகமாடிய குற்றத்துக்காகவும் அவருடைய மனைவி லலிதா குமாரி மற்றும் யசோதா, கோபாலகிருஷ்ணன் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 3 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை அனுபவிக்கவும் வேண்டும் என்று நீதிபதி ராமகிருஷ்ணன் பரபரப்பு தீர்ப்பு அளித்தார்.
இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் சண்முகசுந்தரம் ஆஜர் ஆனார்.