தாக்கியவரை கைது செய்யக்கோரி மின்துறை ஊழியர்கள் திடீர் போராட்டம்
மின்துறை ஊழியரை தாக்கியவரை கைது செய்யக்கோரி மின்துறை ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி,
புதுவை தொண்டமாநத்தத்தில் முருகன் என்பவர் மின்சார வயரில் இருந்து கொக்கி போட்டு மின்சாரம் திருடியதாக கூறப்படுகிறது. இதுப ற்றி தெரியவந்ததை தொடர்ந்து மின்துறை ஊழியர் சிவக்குமார் அவரை கண்டித்துள்ளார். திருட்டுத்தனமாக கொக்கிப் போட்டு எடுத்த மின்இணைப்பையும் அவர் துண்டித்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட தகராறில் சிவக்குமாரை முருகன் தாக்கியுள்ளார். இதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மின்துறை ஊழியர் தாக்கப்பட்டதை அறிந்த மற்ற ஊழியர்கள் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வம்பாகீரப்பாளையத்தில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்தில் கூடிய அவர்கள் முருகனை கைது செய்யக்கோரி கோஷங்களை எழுப்பினார்கள்.
இந்த போராட்டத்தில் மின்துறை உதவியாளர்கள், வயர்மேன், போர்மேன் உள்ளிட்ட தொழில்நுட்ப ஊழியர்கள் கலந்துகொண்டனர். இதனால் மின்துறை பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.