கோவையில், 2–வது முறையாக நடத்தப்பட்ட இரட்டை அடுக்கு ரெயில் சோதனை ஓட்டம் வெற்றி

கோவையில், 2–வது முறையாக நடத்தப்பட்ட இரட்டை அடுக்கு ரெயில் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை,
கோவை–பெங்களூரு இடையே உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் இரட்டை அடுக்கு பெட்டிகளுடன் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சாதாரண ரெயில் பெட்டிகளை விட இரட்டை அடுக்கு ரெயில் பெட்டிகள் சற்று உயரமாகவும், நீளமாகவும் இருக்கும். எனவே அந்த பெட்டிகள் செல்லும்போது நடைமேடையில் பெட்டிகள் இடிக்கிறதா? மேலே செல்லும் மின்சார வயரில் உரசுகிறதா? என்றும் நேற்றுமுன்தினம் இரண்டாவது முறையாக சோதனை ஓட்டம் நடத்தி பார்க்கப்பட்டது.
கோவையிலிருந்து 10 பெட்டிகளுடன் மின்சார ரெயில் என்ஜின் மூலம் இயக்கி சோதனை நடத்தப்பட்டதில் இருகூர் அருகே சென்ற போது மேலே சென்ற மின்சார வயர் ரெயில் பெடடியின் மேலே உரசியது. இதைத்தொடர்ந்து அந்த ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. திருப்பூரிலிருந்து மின்சார வயரை சரிசெய்யும் எந்திரம் வரவழைக்கப்பட்டு அந்த வயர் சரிசெய்யப்பட்ட பின்னர் சோதனை ஓட்ட ரெயில் மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
இதுகுறித்து கோவை ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
இரட்டை அடுக்கு ரெயில் பெட்டிகள் செல்லும் போது நடைமேடையில் உரசினால் அவை எந்த இடத்தில் உரசுகிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக ரெயில் பெட்டிகளின் பக்கவாட்டில் ‘தெர்மோகோல்’ ஒட்டி வைக்கப்பட்டு அதில் சிவப்பு நிற பெயிண்ட் பூசப்பட்டது. அதை வைத்து எந்த நடைமேடையில் ரெயில் பெட்டி உரசுகிறது என்று பார்த்து அந்த இடத்தில் நடைமேடை சரி செய்யப்பட்டது. இவை ரெயில் பெட்டியின் பக்கவாட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. கோவையிலிருந்து ஜோலார் பேட்டை அருகே உள்ள சோமநாயக்கன்பட்டி வரையும் அதன்பின்னர் மீண்டும் கோவை வரை இரட்டை அடுக்கு ரெயில் பெட்டி இயக்கி சோதனை நடத்தப்பட்டது. இதில் எந்த இடர்பாடும் இன்றி ரெயில் சென்று வந்ததால் இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.