சென்னைக்கு காரில் கடத்திவரப்பட்ட மீனவர் கீழே குதித்து தப்பினார்


சென்னைக்கு காரில் கடத்திவரப்பட்ட மீனவர் கீழே குதித்து தப்பினார்
x
தினத்தந்தி 7 Dec 2017 4:30 AM IST (Updated: 7 Dec 2017 1:59 AM IST)
t-max-icont-min-icon

சென்னைக்கு காரில் கடத்திவரப்பட்ட மீனவர் கீழே குதித்து தப்பி, தங்க கட்டிகள் கடத்தல் விவகாரத்தில் தன்னை கூலிப்படை கொல்ல முயன்றதாக போலீசில் புகார் கொடுத்தார்.

கடலூர்,

கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே நேற்று மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்தவழியாக சென்ற கார் ஒன்றின் கதவை திறந்து வாலிபர் ஒருவர் குதித்தார். இதில் லேசான காயம் அடைந்த அவர், அபயக்குரல் எழுப்பியபடி ஆர்ப்பாட்டம் நடைபெற்ற கூட்டத்திற்குள் புகுந்தார்.

இதனை பார்த்த போலீசார் வாலிபர் வந்த காரை மடக்கினர். அப்போது காரில் இருந்த 5 பேர் போலீசாரை கண்டதும் காரில் இருந்து இறங்கி தப்பி ஓட்டம் பிடித்தனர். போலீசார் துரத்திச் சென்று 2 பேரை மடக்கிப் பிடித்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், காரில் இருந்து குதித்து காயம் அடைந்தவர், நாகை மாவட்டம் பூம்புகாரை சேர்ந்த மீனவர் ஜெகன் என்கிற சுதன்(வயது 28) என்பதும், தப்பி ஓடியவர்களில் போலீசில் சிக்கிய கார் டிரைவர் சென்னை எண்ணூர், அன்னைசிவகாமி நகரை சேர்ந்த ராஜா(29), தரங்கம்பாடியை சேர்ந்த செண்பகராஜ்(20) எனவும் தெரியவந்தது.

இதையடுத்து ஜெகன் உள்பட 3 பேரையும் போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் மீனவர் ஜெகன், தங்க கட்டிகள் கடத்தல் விவகாரத்தில் தன்னை கூலிப்படையினர் கொல்ல முயன்றதாக போலீசில் புகார் தெரிவித்தார்.

அதன் விவரம் வருமாறு:–

தரங்கம்பாடியை சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் சொன்னதன் பேரில் ஜெகன் மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேர் படகில் இலங்கையில் இருந்து 100 கிராம் எடை கொண்ட 120 தங்க கட்டிகளை கடத்தி வந்தனர். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த தங்க கட்டிகளை சம்பந்தப்பட்ட நபரிடம் ஒப்படைக்காமல் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஜெகன் உள்பட 3 பேரையும் தேடி கண்டுபிடித்து அவர்களிடம் இருக்கும் தங்கக்கட்டிகளை வாங்கிக்கொண்டு, அவர்களை வெட்டி கொலை செய்வதற்காக கூலிப்படையை பூம்புகாருக்கு கடத்தல் தொழில் செய்யும் முக்கிய நபர் அனுப்பி வைத்தார். அதன்பேரில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து கூலிப்படையினர் 5 பேர் பூம்புகாருக்கு சென்றனர்.

அப்போது ஜெகன் மட்டும் கூலிப்படையினர் கையில் சிக்கியது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த 37 தங்கக்கட்டிகளை கூலிப்படையினரிடம் பறித்துக் கொண்டு, மீதமுள்ள தங்க கட்டிகள் குறித்து விசாரித்தனர். ஆனால் அவர் தனக்கு எதுவும் தெரியாது என கூறினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் ஜெகனை காரில் சென்னைக்கு கடத்தி சென்று கொண்டிருந்தனர். அப்போது தான் காரின் பின் கதவை திறந்து ஜெகன் சாலையில் குதித்ததால் அவர்கள் போலீசில் சிக்கியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


Next Story