ஈரோடு ரெயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற மனிதநேய ஜனநாயக கட்சியினர் 135 பேர் கைது


ஈரோடு ரெயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற மனிதநேய ஜனநாயக கட்சியினர் 135 பேர் கைது
x
தினத்தந்தி 7 Dec 2017 4:15 AM IST (Updated: 7 Dec 2017 2:21 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு ரெயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற மனிதநேய ஜனநாயக கட்சியினர் 135 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு,

பாபர் மசூதி வழக்கில் சட்டத்தின் அடிப்படையில் விரைந்து தீர்ப்பு வழங்கக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஈரோடு ரெயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இந்த போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக கட்சியினர் ஏராளமானோர் காளை மாட்டு சிலை அருகில் நேற்று ஒன்று கூடினார்கள்.

போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ‌ஷபிக் அலி தலைமை தாங்கினார். பொருளாளர் முகமது அலி முன்னிலை வகித்தார். மாநில துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர் பேராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

இதைத்தொடர்ந்து அவர்கள் காளை மாட்டு சிலையில் இருந்து ஊர்வலமாக ரெயில் நிலையத்தை முற்றுகையிட புறப்பட்டனர். அப்போது மத்திய அரசை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். ஈரோடு ரெயில் நிலையம் நுழைவு வாயில் பகுதியில் சென்ற போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் ராஜகுமார், சேகர் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இதில் 15 பெண்கள் உள்பட மொத்தம் 135 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டு, ஈரோடு கள்ளுக்கடைமேட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.


Next Story