நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ மாணவர்கள் 10–வது நாளாக போராட்டம்


நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ மாணவர்கள் 10–வது நாளாக போராட்டம்
x
தினத்தந்தி 8 Dec 2017 3:00 AM IST (Updated: 8 Dec 2017 12:20 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ மாணவர்கள் நேற்று 10–வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை,

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ மாணவர்கள் நேற்று 10–வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

10–வது நாள் போராட்டம்

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவ–மாணவிகள் கடந்த 28–ந் தேதி முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் ஒவ்வொரு நாளும் நூதன முறையில் போராட்டம் நடத்தினர். நேற்று 10–வது நாளாக பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவ–மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்களின் கூட்டமைப்பு தலைவர் எட்வின் கிங்ஸ் ராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் பசுபதி முன்னிலை வகித்தார்.

கோரிக்கைகள்

தமிழக அரசு மருத்துவமனைகளில் 550 டாக்டர்கள் நியமனத்தில் அரசு ஏற்கனவே அறிவித்த நடைமுறையை பின்பற்றவில்லை. எனவே இந்த பணி நியமனத்தை ரத்து செய்து, அந்த பணியிடத்தில் அரசு டாக்டர்களை நியமிக்க வேண்டும்.

பதிவுமூப்பு அடிப்படையில் டாக்டர்களை பணியமர்த்த வேண்டும். புதிதாக நியமிக்கப்படும் டாக்டர்களுக்கு கிராமப்புற சேவையை கட்டாயமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

இதுகுறித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறும் போது, “எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். சுகாதாரத்துறை செயலாளர் எங்களை அழைத்து பேசுவார் என்று நம்பிக்கை இருக்கிறது. அப்படியில்லையென்றால், எங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்“ என்றனர். இந்த போராட்டத்தில் திரளான பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story