மீனவர்களை சந்தித்து கவர்னர் ஆறுதல் கூறியதால் என்ன நஷ்டம் வந்துவிட்டது?
குமரி மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்தித்து கவர்னர் ஆறுதல் கூறியதால் என்ன நஷ்டம் வந்து விட்டது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
நாகர்கோவில்,
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று நாகர்கோவில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசையை ஆசாரிபள்ளம் சாலையில் உள்ள ஆயர் இல்லத்துக்கு சென்று சந்தித்து பேசினார். அப்போது, புயலால் பாதிக்கப்பட்டு கடலில் காணாமல் போன மீனவர்களை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆயர் நசரேன்சூசை அளித்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், ‘காணாமல் போன மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. இந்த பணியில் கப்பற்படை மற்றும் கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன. எனவே காணாமல் போன மீனவர்கள் கண்டிப்பாக கண்டுபிடிக்கப்படுவார்கள்‘ என்று தெரிவித்தார்.
சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பின் போது கோட்டார் குருகுல முதல்வர் கிலாரியூஸ், மறைமாவட்ட செயலாளர் இமானுவேல், கடலோர அமைதி மற்றும் வளர்ச்சிக்குழு இயக்குனர் ஸ்டீபன் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் முத்துகிருஷ்ணன், முத்துராமன், கணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதனை தொடர்ந்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
குமரி மாவட்டத்தில் ‘ஒகி‘ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நான் நேரில் சென்று பார்வையிட்டேன். மீனவ சகோதரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்ததால் மீனவ கிராமங்களுக்கு செல்ல முடியவில்லை. மலையோர பகுதிகளில் கணக்கிட முடியாத அளவுக்கு சேதம் ஏற்பட்டு இருக்கிறது. தோட்டமலையில் ஏற்பட்டுள்ள பாதிப்பில் இருந்து மீண்டு வர, அங்குள்ள மக்களுக்கு 2 ஆண்டுகளாவது ஆகும். எனவே அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
குமரி மாவட்ட மீனவர்கள் குஜராத், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, போர்வை, டீசல் உள்ளிட்டவற்றை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த மாநிலங்களுக்கு அதிகாரிகளை அனுப்பி இருக்கிறோம். காணாமல் போன மீனவர்களை தேட மத்திய, மாநில அரசுகள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொய் தகவல் பரப்பப்படுகிறது. மீனவர்களை தேடும் பணியில் கப்பற்படையினருடன் சேர்ந்து மீனவர் குழுக்களும் ஈடுபட்டுள்ளனர்.
குமரி மாவட்டத்தில் ‘ஒகி‘ புயல் பேரழிவை ஏற்படுத்தி இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வளவு உதவி செய்ய முடியுமோ அவ்வளவு உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது. பலியான மீனவர்களுக்கு இழப்பீடு தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்தி அரசு அறிவித்து இருக்கிறது. இந்த உதவித்தொகை பலியான அனைவரின் குடும்பத்துக்கும் சென்று சேர வேண்டும். கேரளாவில் இறந்த மீனவர்களுக்கு அரசு வழங்கிய நிவாரணத்தொகை போல தமிழக அரசும் வழங்க வேண்டும்.
காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும். ‘ஒகி‘ புயல் பாதிப்புகளை பயன்படுத்தி யாரும் அரசியல் செய்ய வேண்டாம். காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கையை அமைச்சர்கள் சரியாக சொல்லாததால் தேடுதலில் சிக்கல் ஏற்பட்டது. காணாமல் போயுள்ள மீனவர்களை மீட்டு தரக்கோரி மீனவ மக்கள் போராட்டம் நடத்துவது தவறு இல்லை. உறவினர்களை இழந்தவர்கள் தங்களது மனக்குமுறல் தாங்காமல் போராடுகிறார்கள்.
குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்து இருக்கிறார். இதுதொடர்பாக மத்திய அரசு குழு அமைத்து ஆய்வு செய்யும். புயல் சேத பகுதிகளை பார்வையிட முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குமரி மாவட்டம் வரவேண்டும். குமரி மாவட்டம் 3 பக்கமும் கடலால் சூழப்பட்டு உள்ளது. எனவே கடலில் வழி தவறி செல்லும் மீனவர்களை தேட ஹெலிகாப்டர் தளம் மட்டும் இன்றி கடலோர காவல் படை தளமும் தேவை.
கவர்னர் தன்னுடைய வரையறைக்கு உட்பட்டுதான் செயல்படுகிறார். குமரி மாவட்டத்தில் ஆய்வு செய்வதற்காக கவர்னர் வரவில்லை. எந்த பொறுப்பில் உள்ளவர்களுக்கும் மனிதாபிமானம் உண்டு. புயலால் பாதிக்கப்பட்டு, கதறி கொண்டு இருந்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவது தவறு இல்லை. கவர்னர் ஆறுதல் கூறியதால் என்ன நஷ்டம் வந்துவிட்டது? பாதிக்கப்பட்ட மக்களை கவர்னர் பார்வையிட்டதை அரசியல் ஆக்க வேண்டாம
இனயத்தில் தான் துறைமுகம் வரவேண்டும் என்று கட்டாயம் இல்லை. குமரி மாவட்டத்தில் எல்லா இடங்களிலும் ஆய்வு செய்யும்படி கூறியுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.