பஸ் நிலையத்தில் பயணிகளிடம் தொடர் கைவரிசை காட்டிய கொள்ளையன் கைது 28 பவுன் நகைகள் மீட்பு
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் பயணிகளிடம் தொடர் கைவரிசை காட்டிய ராம்ஜிநகர் கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 28 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.
திருச்சி,
திருச்சி மத்திய பஸ் நிலையத்துக்கு வரும் பெண் பயணிகள் உள்பட பயணிகளிடம் கடந்த சில நாட்களாகவே அடிக்கடி நகைகள் கொள்ளையடிக்கப்படுவதாக கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்துக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இந்த சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்களை விரைந்து பிடிப்பதற்கு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது.
போலீஸ் துணை கமிஷனர் (குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு) மயில்வாகனன், கண்டோன்மெண்ட் சரக குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் சிவசங்கர் ஆகியோரின் மேற்பார்வையில் கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர்கள் கருணாகரன், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்கள் கமலநாதன், சண்முகம், பெரியசாமி மற்றும் போலீஸ் ஏட்டு அந்தோணி உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை போலீசார் கொள்ளையர்களை பிடிக்க திருச்சி மாநகர பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று மாலை தனிப்படை போலீசார் திருச்சி– திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கருமண்டபம் போலீஸ் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் திருச்சி ராம்ஜிநகர், ஹரி பிரசாத் காலனியை சேர்ந்த சுப்ரமணியின் மகன் அப்பு என்கிற புருசோத்தமன் (வயது 39) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், புருசோத்தமன் திருச்சி மத்திய பஸ் நிலையத்துக்குள் நுழைவதற்கு மெதுவாக வரும் பஸ்களில் ஏறி, அதில் தனியாக பயணம் செய்யும் பெண்கள் வைத்திருக்கும் நகையை கொள்ளையடித்து தொடர் கைவரிசையில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் கடந்த 7–ந்தேதி மட்டும் ஒரே நாளில் புருசோத்தமன் மத்திய பஸ் நிலையத்துக்கு பஸ்சில் வந்த கருமண்டபம் பகுதியை சேர்ந்த மாணிக்கம்மாள் (60) உள்பட 4 பயணிகளிடம் 13 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார். இதேபோல் நேற்று முன்தினமும் மத்திய பஸ் நிலையத்துக்கு பஸ்சில் வந்த விருதுநகரை சேர்ந்த பாண்டியம்மாள் (66) உள்பட 4 பயணிகளிடம் 9 பவுன் நகைகளை கொள்ளையடித்ததும் தெரியவந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு புருசோத்தமன் திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்களிடம் மொத்தம் 6 பவுன் நகைகளை கொள்ளையடித்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
மேற்கண்ட சம்பவங்கள் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து புருசோத்தமனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்மீது திருச்சி மாநகர போலீஸ் நிலையங்களிலும், வெளி மாநிலங்களிலும் பல்வேறு கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக புருசோத்தமனிடம் இருந்து 28 பவுன் நகைகள் மீட்கப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். கொள்ளையடித்த நகைகள் மற்றும் திருடிய மோட்டார் சைக்கிள்களை விற்று, அதில் கிடைக்கும் பணத்தை வைத்து சொகுசு வாழ்க்கையில் ஈடுபடலாம் என்று புருசோத்தமன் முடிவு செய்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
பயணிகளிடம் நகைகளை கொள்ளையடிப்பது மட்டுமின்றி கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்பது போன்ற செயல்களிலும் புருசோத்தமன் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் கடந்த மார்ச் மாதம் மத்திய பஸ் நிலையத்திற்குள் பஸ்சில் வந்தபோது துவாக்குடி பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கத்திடம் (60) ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றதும், கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 3 மோட்டார் சைக்கிள்களை அவர் திருடி சென்றதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த ரூ.20 ஆயிரத்தையும், 3 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருச்சி மாவட்டம் ராம்ஜி நகரை சேர்ந்த கொள்ளையர்கள் வடமாநிலங்களில் ஓடும் ரெயில்களில் பயணிகளிடம் நகை, பணத்தை நுணுக்கமாக கொள்ளையடிப்பதில் கைதேர்ந்தவர்கள். ஆனால் அவர்கள் தற்போது திருச்சியில் கொள்ளையடிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களை பிடிக்க 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.