மருத்துவ பரிசோதனைக்காக பேரறிவாளனை புழல் சிறைக்கு அனுப்ப ஏற்பாடு அதிகாரி தகவல்


மருத்துவ பரிசோதனைக்காக பேரறிவாளனை புழல் சிறைக்கு அனுப்ப ஏற்பாடு அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 10 Dec 2017 4:30 AM IST (Updated: 10 Dec 2017 12:56 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவப் பரிசோதனைக்காக பேரறிவாளனை வேலூரில் இருந்து சென்னை புழல் சிறைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வேலூர்,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் தங்களது விடுதலைக்காக பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அதில், பேரறிவாளனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு 2 மாதம் பரோல் வழங்கியது.

இதையடுத்து பேரறிவாளன் மீண்டும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் மூட்டுவலி, சிறுநீரக தொற்றுநோயால் அவதிப்பட்டதால் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் போலீஸ் காவலுடன் அடிக்கடி சென்று சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், சிகிச்சைக்கான உரிய வசதி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் இல்லை எனக் கூறப்படுகிறது.

இந்தநிலையில் பேரறிவாளன் சிறைத்துறைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு விண்ணப்ப மனு அளித்திருந்தார். அதில், எனது உடல்நிலை தொடர்பாக சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்புகிறேன். எனவே என்னை வேலூரில் இருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும், எனக் குறிப்பிட்டு இருந்தார். மனுவை பரிசீலித்த சிறைத்துறையினர் இதுகுறித்து வேலூர் சிறை சூப்பிரண்டுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

அதில், பேரறிவாளனை வேலூர் சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு விரைவில் மாற்ற வேண்டும். அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து வேலூர் சிறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, பேரறிவாளன் தன்னை சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என அளித்த விண்ணப்ப மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க சிறைத்துறை ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி பேரறிவாளனுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் தொடர் சிகிச்சை அளிக்க வேலூர் சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு அடுத்த வாரம் மாற்றப்பட உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்கான நடவடிக்கையை சிறை உயர் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர் என்றார். 

Next Story