மருத்துவ கல்லூரி முறைகேடு தொடர்பான சி.பி.ஐ. விசாரணை சரியாக செல்கிறது


மருத்துவ கல்லூரி முறைகேடு தொடர்பான சி.பி.ஐ. விசாரணை சரியாக செல்கிறது
x
தினத்தந்தி 10 Dec 2017 4:46 AM IST (Updated: 10 Dec 2017 4:46 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவ கல்லூரி முறைகேடு தொடர்பான சி.பி.ஐ. விசாரணை சரியாக செல்கிறது

பாகூர்,

மருத்துவ கல்லூரி முறைகேடு தொடர்பான சி.பி.ஐ. விசாரணை சரியாக செல்கிறது என்று கவர்னர் கிரண்பெடி கூறினார்.

புதுவை மாநிலம் மணவெளி தொகுதி தானாம்பாளையம் கிராமத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை கடந்த மாதம் 31–ந் தேதி முதல்–அமைச்சர் நாராயணசாமி, அரசு கொறடா அனந்தராமன் ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தனர். இந்த நிலையில் நேற்று காலை கவர்னர் கிரண்பெடி, தானாம்பாளையத்தில் திறக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது சுத்திகரிப்பு நிலையத்தின் கழிவுநீர் வீணாக செல்வதை கண்ட கவர்னர், அதை பிற தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும். அல்லது குடிநீர் தொட்டி வளாகத்தில் பூங்கா அமைத்து செடிகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள், ‘‘எங்கள் வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படும் தண்ணீர் பழுப்பு நிறத்தில் வருவதாக கூறி, பாட்டிலில் பிடித்து வைத்திருந்த தண்ணீரை கவர்னரிடம் காண்பித்தனர். மேலும் அவர்கள், நீங்கள் வந்த பின், ரே‌ஷன் கடைகளில் இலவச அரிசி, சர்க்கரை, பாமாயில், மண்எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படவில்லை என்று புகார் தெரிவித்து, இதற்கு நீங்கள் தான் காரணமாக என கவர்னரிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்து கவர்னர் கிரண்பெடி பேசுகையில், ‘இலவச அரிசிக்கான திட்டத்தை நான் தடுக்கவில்லை. எனக்கு தமிழ் மொழி தெரியாததால், என் மீது பொய்யான குற்றச்சாட்டை எம்.எல்.ஏ.க்கள் பரப்பி வருகின்றனர். நான் எந்த கோப்புகளையும் நிறுத்தி வைக்கவில்லை. உங்களுக்கு சந்தேகம் இருந்தால், தகவல் அறியும் உரிமை சட்டத்திலும், கவர்னர் மாளிகையில் தொடர்பு கொண்டும் விளக்கம் பெறலாம்’ என்றார்.

இதனை தொடர்ந்து தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த கவர்னர் கிரண்பெடி, பணியில் இருந்த டாக்டர்கள் மற்றும் பணியாளர்களிடம் சிறப்பாக பணி செய்யவேண்டும் என்றார்.

ஆய்வின்போது பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. முதல்–அமைச்சர் திறந்து வைத்து சில நாட்களே ஆன குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை கவர்னர் ஆய்வு செய்தது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆய்வின்போது கவர்னர் கிரண்பெடி நிருபர்களிடம் கூறுகையில், ‘திட்டமிட்டு பொய்யான தகவல் பரப்புவதால், மக்கள் என் மீது புகார் தெரிவிக்கின்றனர். இது உண்மை அல்ல. கவர்னர் மாளிகை மக்கள் சேவைக்காக உள்ளது. மாதம் ஆயிரம் புகார்கள் என இதுவரை 12 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன. மருத்துவ கல்லூரி முறைகேடு தொடர்பான சி.பி.ஐ. விசாரணை சரியாக செல்கிறது. வரும் ஆண்டுகளில் மாணவர்கள் சேர்க்கை முறையாக நடைபெறும்’ என்றார்.


Next Story