‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்


‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
x
தினத்தந்தி 11 Dec 2017 4:30 AM IST (Updated: 11 Dec 2017 12:17 AM IST)
t-max-icont-min-icon

‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், ஒகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்வது தொடர்பாக நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும், தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மைச் செயலாளருமான டி.கே.ராமச்சந்திரன், கூடுதல் கண்காணிப்பு அலுவலரும், தொழில்துறை முதன்மைச் செயலாளருமான ராஜேந்திரகுமார், வேளாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் பெடி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் ஜோதி நிர்மலா, மீன்வளத்துறை இயக்குனர் தண்டபாணி மற்றும் மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனிடம், குமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீரமைப்பு பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.

இந்த ஆலோசனையின்போது மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:–

‘ஒகி’ புயலினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மீனவர்கள் மற்றும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துதல் தொடர்பான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் கடலோர காவல்படையினருடன், சின்னத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த 5 மீனவர்களும், தூத்தூர் கிராமத்தை சேர்ந்த 2 மீனவர்களும் சேர்ந்து தீவுபகுதிகளில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த மீனவர்களுக்கு, குமரி மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்கும்போது தங்கும் தீவு பகுதிகள் குறித்த விவரங்கள் தெரியும் என்பதால் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் வாழ்வாதாரங்களை மேம்படுத்துதல் தொடர்பாக மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், ரப்பர் கழகம் போன்ற துறைகளுடன் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளும், நடவடிக்கைகளும் தொடர்ந்து எடுக்கப்படும்.

இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.


Next Story