குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 2 ஊர்களில் மீனவர்கள் போராட்டம் கண்ணில் கருப்பு துணி கட்டிக்கொண்டு கோ‌ஷம்


குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 2 ஊர்களில் மீனவர்கள் போராட்டம் கண்ணில் கருப்பு துணி கட்டிக்கொண்டு கோ‌ஷம்
x
தினத்தந்தி 11 Dec 2017 11:00 PM GMT (Updated: 11 Dec 2017 5:46 PM GMT)

கடலில் மாயமான மீனவர்களை மீட்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்டத்தில் 2 ஊர்களில் மீனவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். இரவிபுத்தன்துறையில் கருப்பு துணியால் கண்களை கட்டிக் கொண்டு கோ‌ஷங்கள் எழுப்பினர். மார்த்தாண்டன் துறையில் நடந்த போராட்டத்திலும் திரளானோர் பங்கேற்றனர்.

நித்திரவிளை,

‘ஒகி’ புயலால் குமரி மாவட்டத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பலர் இதுவரை கரை திரும்பவில்லை.

குறிப்பாக நீரோடி, தூத்தூர், சின்னத்துறை, பூத்துறை போன்ற கடற்கரை கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் அதிக எண்ணிக்கையில் மாயமாகி உள்ளனர். அவர்களை கண்டுபிடித்து மீட்க வேண்டும், புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும், குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவ மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நேற்று 5–வது நாளாக மீனவர்கள் போராட்டம் நீடித்தது. இரவிபுத்தன்துறை, மார்த்தாண்டன்துறை ஆகிய 2 ஊர்களிலும் ஏராளமான மக்கள் நேற்று காலையில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இரவிபுத்தன்துறையில், சுற்று வட்டாரத்தில் உள்ள இரையுமன்துறை, பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை போன்ற மீனவ கிராமங்களை சேர்ந்த பெண்கள், மாணவர்கள் என ஏராளமானோர் குவிந்தனர். அங்கு அமைக்கப்பட்டு இருந்த போராட்ட பந்தலில் அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களின் கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு கோ‌ஷங்கள் எழுப்பினர்.

கரை திரும்பாத மீனவர்களின் குடும்பத்தினரும் போராட்டத்தில் பங்கேற்றனர். மாயமான மீனவர்கள் பத்திரமாக கரை திரும்ப வேண்டும் என்று கூறி அவர்கள் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.

மார்த்தாண்டன்துறை மீனவ கிராமத்தில் இருந்து 31 பேரும், வள்ளவிளையில் இருந்து 138 பேரும், நீரோடி மீனவ கிராமத்தில் இருந்து 43 பேரும் கடலில் மாயமாகி இருப்பதாக கூறப்படுகிறது.

நேற்று மார்த்தாண்டன்துறையில் நீரோடி, வள்ளவிளை போன்ற கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் பங்கேற்றவர்களில் சிலர் வாயில் கருப்பு துணி கட்டி இருந்தனர்.


Next Story