பா.ஜனதாவால் தேர்தல் பிரசாரம் தரம் தாழ்ந்துவிட்டது சிவசேனா கடும் தாக்கு


பா.ஜனதாவால் தேர்தல் பிரசாரம் தரம் தாழ்ந்துவிட்டது சிவசேனா கடும் தாக்கு
x
தினத்தந்தி 11 Dec 2017 10:30 PM GMT (Updated: 11 Dec 2017 9:14 PM GMT)

குஜராத் சட்டசபை தேர்தலையொட்டி, பா.ஜனதாவின் செயல்பாடுகளால் தேர்தல் பிரசாரம் தரம் தாழ்ந்துவிட்டதாக சிவசேனா தெரிவித்துள்ளது.

மும்பை,

இது தொடர்பாக சிவசேனா பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கத்தில் நேற்று கூறி இருப்பதாவது:–

பிரதமர் மோடிக்கு எதிரான காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யரின் கருத்தால், குஜராத்தின் பெருமைக்கு இழுக்கு ஏற்பட்டுவிட்டதாக கூறி, மோடி தன்னை சிறுமைப்படுத்தி கொண்டார். அவரை நாங்கள் நாட்டின் பெருமையாகவும், இந்துக்களின் பெருமையாகவும் கருதுகிறோம். ஆனால், அவர் தற்போது குஜராத்தின் பெருமையோடு பிணைக்கப்பட்டிருக்கிறார்.

குஜராத் தேர்தல் காரணமாக, தேசிய தலைவராக இல்லாமல், பிராந்திய அளவிலான தலைவராகவே அவர் அதிகம் காணப்படுகிறார். மோடியின் பிரசார பேச்சுகளில் வளர்ச்சி திட்டங்களை காணவில்லை. அவை மாயமாகி விட்டன.

மோடி தனது சொந்த மாநிலத்தில், பிரசாரத்தின் போது சில சமயங்களில் உணர்வுப்பூர்வமாகவும், சில சமயம் ஆக்ரோ‌ஷமாகவும் காணப்படுகிறார். குஜராத் மாநிலம் தான் எங்களுக்கு பிரதமரை தந்தது. அங்கு தான் பாரதீய ஜனதா கடந்த 22 ஆண்டுகளாக ஆண்டு வருகிறது. ஆனால், தேர்தல் பிரசாரத்தில் பா.ஜனதா அடிமட்டத்துக்கு செல்வது ஏன்?

குஜராத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் அரங்கேறிய தில்லுமுல்லு வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இந்த முறைகேடு குறித்து, பா.ஜனதா ஆதரவுபெற்ற தேர்தல் கமி‌ஷனிடம் புகார் தெரிவித்து எந்த பயனும் இல்லை. பா.ஜனதாவின் செயல்பாடுகளால், தேர்தல் பிரசாரத்தின் தரம் தாழ்ந்துவிட்டது.

மராட்டிய சட்டசபை தேர்தலின் போது, அப்சல்கானின் பெயரை நாங்கள் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜனதா, நாங்கள் அடிமட்டத்துக்கு இறங்கிவிட்டதாக குற்றம்சாட்டியது. இப்போது மோடி குஜராத் தேர்தல் பிரசாரத்தில் முகலாயர்களின் ஆட்சியை மேற்கோள்காட்டி பேசுகிறார்.

காங்கிரசில் ராகுல்காந்தியின் எழுச்சியால் குஜராத்தில் பா.ஜனதா வெற்றி சுலபமாகி விட்டதாக சொல்கிறீர்கள். அப்படி என்றால், அவருக்கு எதிராக பிரதமர், பா.ஜனதா தேசிய தலைவர், அனைத்து மத்திய மந்திரிகள், பா.ஜனதா ஆளும் மாநில முதல்–மந்திரிகள் பிரசாரம் செய்வது ஏன்?. இதனால், பொதுமக்கள் குழம்பிப்போய் இருக்கிறார்கள்.

இவ்வாறு அதில் சிவசேனா தெரிவித்துள்ளது.


Next Story