கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு ஆதரவாக புதுச்சேரியில் மீனவர்கள் போராட்டம்


கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு ஆதரவாக புதுச்சேரியில் மீனவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 12 Dec 2017 3:58 AM IST (Updated: 12 Dec 2017 3:58 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு ஆதரவாக புதுச்சேரியில் மீனவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

புதுச்சேரி,

கன்னியாகுமரி மாவட்டத்தில் வீசிய ஒகி புயலால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் பலர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கவேண்டும், கேரள அரசு வழங்கியதுபோல் தமிழக அரசும் நிவாரணம் வழங்கவேண்டும், மாயமான மீனவர்களை மீட்கவேண்டும், ஒகி புயலால் இறந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவழங்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மீனவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அவர்களுக்கு ஆதரவாக புதுவை மீனவர்களும் நேற்று போராட்டத்தில் குதித்தனர். நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத அவர்கள் சுதேசி மில் அருகே கூடினார்கள். அங்கு உயிரிழந்த மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

அதைத்தொடர்ந்து அவர்கள் அங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தர்ணா போராட்டத்தில் புதுவை கடற்கரையோரம் உள்ள 18 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவ பஞ்சாயத்து நிர்வாகிகள், மீனவர்கள், மீன் விற்கும் பெண்கள் திரளாக கலந்துகொண்டனர்.

மீனவர்களின் இந்த போராட்டம் காரணமாக நேற்று மீன் மார்க்கெட்டுகள் எதுவும் இயங்கவில்லை. மீன்பிடிக்க செல்லாததால் அவர்களது படகுகளும் ஓய்வெடுத்தன.


Next Story