நாகர்கோவிலில் கலெக்டரிடம், காங்கிரஸ் கட்சியினர் மனு

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், விஜயதரணி மற்றும் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். கலெக்டர் சஜ்ஜன்சிங் சவானை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
நாகர்கோவில்,
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், விஜயதரணி மற்றும் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அதைதொடர்ந்து, கலெக்டர் சஜ்ஜன்சிங் சவானை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் அவர்கள் கூறப்பட்டிருப்பதாவது:–
‘ஒகி‘ புயலால் குமரி மாவட்டத்தில் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். வாழை, தென்னை, ரப்பர், நெல் உள்ளிட்ட விவசாய பணிகள் 90 சதவீதம் அளவுக்கு சேதமடைந்துள்ளது. விவசாயிகளுக்கு முறையாக நஷ்டஈடு வழங்கப்படவில்லை. அரசு அறிவித்த இழப்பீட்டு தொகை, விவசாயிகளுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டுவதாக அமையவில்லை. எனவே, பயிர்சேத விவரங்களை மதிப்பிடும்போது சேதமடைந்த பயிர்களின் உற்பத்தி செலவையும், பயிர் உற்பத்தியால் கிடைக்கும் விலையையும் கணக்கில் கொண்டு உரிய நஷ்டஈடு வழங்கவேண்டும்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. ‘ஒகி‘ புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் ரூ.25 லட்சம் இழப்பீடு தொகையும், இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுவேலையும் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.