தட்சிண கன்னடா மாவட்டத்தில் அமைதி வேண்டி மங்களூருவில் காங்கிரஸ் சார்பில் நல்லிணக்க நடைபயணம்


தட்சிண கன்னடா மாவட்டத்தில் அமைதி வேண்டி மங்களூருவில் காங்கிரஸ் சார்பில் நல்லிணக்க நடைபயணம்
x
தினத்தந்தி 13 Dec 2017 12:26 AM GMT (Updated: 2017-12-13T05:56:38+05:30)

தட்சிண கன்னடா மாவட்டத்தில் அமைதி வேண்டி மங்களூருவில் காங்கிரஸ் சார்பில் நேற்று நல்லிணக்க நடைபயணம் நடந்தது. நடிகர் பிரகாஷ் ராஜ், மந்திரிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

மங்களூரு,

கர்நாடகத்தில் கடந்த சில ஆண்டுகளாக இந்து அமைப்பினர் கொலை செய்யப்பட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது. இதை கண்டித்தும், உண்மையான குற்றவாளிகளையும் கைது செய்யகோரியும் பா.ஜனதா கட்சியினரும், இந்து அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக தட்சிண கன்னடா மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக மத மோதல் சம்பவங்கள் அதிகமாக நடத்து வருவதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

எனவே இந்த மதமோதல் சம்பவங்களை தடுக்கவும், மாவட்ட மக்களிடையே அமைதியை நிலைநாட்டவும் காங்கிரஸ் கட்சி சார்பில் நல்லிணக்க நடைபயணம் நடத்த மாவட்ட பொறுப்பு மந்திரியும், வனத்துறை மந்திரியுமான ரமாநாத் ராய் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால் தட்சிண கன்னடா மாவட்டத்தில் நடைபெற்ற மதமோதல்கள் சம்பவங்கள் காரணமாக அங்கு ஊர்வலம், பேரணி நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக தட்சிண கன்னடா மாவட்டத்தில் அமைதியான சூழ்நிலை நிலவியதால் பேரணி, ஊர்வலம் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை மாவட்ட போலீசார் திரும்ப பெற்றனர். அதன்படி நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் நல்லிணக்க நடைபயணம் நடந்தது. பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் தலைமையில் நடந்த இந்த நடைபயணம் மங்களூரு பரங்கிபேட்டையில் தொடங்கி புத்தூர் வழியாக மாணியை சென்றடைந்தது. சுமார் 23 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்த நல்லிணக்க நடைபயணத்தில். மந்திரிகள் ரமாநாத் ராய், யு.டி.காதர், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்தவர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

புத்தூர் தாலுகா கல்லடுக்கா வழியாக ஊர்வலம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க அந்த பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதீர்குமார் ரெட்டி தலையில் சுமார் 300–க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


Next Story