உடுமலை சங்கர் கொலை வழக்கில் 3 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் திருமாவளவன் பேட்டி
உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தாயார் உள்பட 3 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என திருமாவளவன் கூறினார்.
ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் நடைபெற உள்ள திருமண விழாவிற்காக வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவை விட 10 மடங்கு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு ரூ. 10 ஆயிரம் கோடி நிவாரண தொகை வழங்க வேண்டும். உடுமலை சங்கர் கொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு தமிழகத்திற்கு மட்டுமன்றி அகில இந்தியாவிற்கும் ஆணவ கொலையில் ஈடுபடுபவர்களுக்கு பாடம். இதை வரவேற்கிறோம். சதி திட்டம் தீட்டியதில் பங்கு வகித்த கவுசல்யாவின் தாயார் உள்பட 3 பேர் விடுதலையை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும்.
இந்து கோவில் விவகாரத்தில் நான் போதிய விளக்கம் அளித்துள்ளேன். பொதுமக்கள் அதை புரிந்து கொண்டுள்ளனர். எச்.ராஜா பதற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் அவதூறு பரப்புகிறார். யாரையும் புண்படுத்தும் நோக்கில் கருத்து கூறவில்லை. சாலை பணியாளர்கள் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை அரசு நடைமுறை படுத்த வேண்டும்.
ஆர்.கே நகரில் தேர்தல் நடப்பதை ஆளுங்கட்சி விரும்பவில்லை. எனவே தான் தேர்தல் ஆணையம் கடந்தமுறை போன்று பணப்பட்டுவாடா நடப்பதை வேடிக்கை பார்க்கிறதோ? அதை வைத்து மீண்டும் தேர்தலை நிறுத்த முயற்சி நடக்கிறதோ? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.