ஆம்புலன்ஸ் டிரைவர் கொலை வழக்கில் கோவில்பட்டி பீடிக்கடை உரிமையாளர் கைது


ஆம்புலன்ஸ் டிரைவர் கொலை வழக்கில் கோவில்பட்டி பீடிக்கடை உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 13 Dec 2017 10:15 PM GMT (Updated: 13 Dec 2017 8:58 PM GMT)

ஆம்புலன்ஸ் டிரைவர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கோவில்பட்டி பீடிக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் காந்தாரி முத்து (வயது 53). ஆம்புலன்ஸ் டிரைவர். இவர், கடந்த 31-8-2017 அன்று இரவில் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி முன்பு மர்மநபர்களால் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கோவில்பட்டி செண்பகாநகரைச் சேர்ந்த பீடிக்கடை உரிமையாளரான முகமது ரபீக் (43) தூண்டுதலின்பேரில், கூலிப்படையினர் அவரை கொலை செய்தது தெரிய வந்தது. கூலிப்படையாக செயல்பட்ட நெல்லை மாவட்டம் மருதூரை சேர்ந்த சதீஷ், ரமேஷ், மருதீசுவரன் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான முகமது ரபீக்கை போலீசார் தேடி வந்தனர்.

கைது

இந்த நிலையில் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் ஆலோசனையின்பேரில், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று காலையில் கோவில்பட்டி ரெயில் நிலையம் அருகில் முகமது ரபீக்கை கைது செய்தனர். பின்னர் அவரை கோவில்பட்டி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை, வருகிற 27-ந்தேதி வரையிலும் காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட்டு ஜெயசுதாகர் உத்தரவிட்டார்.

மற்றொரு கொலை வழக்கு

கடந்த 3-8-2016 அன்று முகமது ரபீக் மகன் அப்துல்லா கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதான காந்தாரிமுத்துவின் மகன்கள் கனகராஜ், மந்திரமூர்த்தி ஆகியோர் சிறையில் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 12-10-2016 அன்று காந்தாரிமுத்து மகன் கருப்பசாமி (23) கோவில்பட்டியில் இருந்து விருதுநகருக்கு பஸ்சில் சென்றபோது, சாத்தூரில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கிலும் முகமது ரபீக் சம்பந்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story