கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட நெல்லை இன்ஸ்பெக்டரின் குடும்பத்தினருக்கு நடிகர் கார்த்தி ஆறுதல்
கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட நெல்லை இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் குடும்பத்துக்கு நடிகர் கார்த்தி ஆறுதல் கூறினார்.
நெல்லை,
கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட நெல்லை இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் குடும்பத்துக்கு நடிகர் கார்த்தி ஆறுதல் கூறினார்.
தீரன்சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் ‘தீரன்‘ அதிகாரம் ஒன்று. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வீட்டில் இருப்பவர்களை கொன்று விட்டு நகை–பணத்தை கொள்ளையடித்து செல்லும் வடமாநில கும்பலை போலீஸ் அதிகாரி ராஜஸ்தானுக்கு சென்று பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு பிடித்து வருவதே இந்த படத்தின் கதை ஆகும். இதில் நடிகர் கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்து உள்ளார்.
அதேபோல் சென்னை நகைக்கடையில் துளைபோட்டு கொள்ளையடித்து சென்ற ராஜஸ்தானை சேர்ந்த கொள்ளை கும்பலை பிடிக்கச் சென்ற சென்னை மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டரும், நெல்லையை சேர்ந்தவருமான பெரியபாண்டியன், கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் சமூக வலைத்தளங்களில் தீரன் படத்தையும், பெரியபாண்டியனையும் ஒப்பிட்டு பல்வேறு கருத்துகள் வெளியானது. ‘ரியல் தீரன்‘ என்றும் கருத்து பதிவானது.
நடிகர் கார்த்தி ஆறுதல்இந்த நிலையில் நடிகர் கார்த்தி, இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் சொந்த ஊரான சங்கரன்கோவில் அருகே உள்ள மூவிருந்தாளி சாலைப்புதூருக்கு நேற்று காலை 6 மணியளவில் வந்தார். அவர் பெரியபாண்டியனின் மனைவி பானுரேகா, மகன்கள் ரூபன், ராகுல் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் பெரியபாண்டியன் அடக்கம் செய்யப்பட்டு உள்ள தோட்டத்துக்கு சென்று அவரது கல்லறையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் கார்த்தி நிருபர்களிடம் கூறுகையில், இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் தானமாக நிலம் கொடுத்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு அவரது பெயரை சூட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.