சென்னிமலை அருகே ரூ.40 லட்சம் மதிப்புள்ள துணி பண்டல் கடத்திய 2 பேர் கைது


சென்னிமலை அருகே ரூ.40 லட்சம் மதிப்புள்ள துணி பண்டல் கடத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 16 Dec 2017 3:30 AM IST (Updated: 16 Dec 2017 12:31 AM IST)
t-max-icont-min-icon

சென்னிமலை அருகே ரூ.40 லட்சம் மதிப்புள்ள துணி பண்டல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னிமலை,

திருப்பூர் மாவட்டம், பல்லடம் கோவை மெயின் ரோடு அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் (வயது 24). அதே பகுதியில் லாரி டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார். இவருடைய நிறுவனத்தில் உள்ள ஒரு லாரியில் கடந்த 4 நாட்களுக்கு முன் பல்லடத்தில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான துணி பண்டல்கள் ஏற்றி அனுப்பப்பட்டது.

இந்த லாரியை வேலூர் பகுதியை சேர்ந்த குணசேகரன் (46) என்ற டிரைவர் ஓட்டிசென்றார். இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஓமலுர் அருகே ரோட்டோரத்தில் இந்த லாரி நிற்பதாக லாரியின் உரிமையாளருக்கு அந்த பகுதியில் உள்ளவர்கள் தகவல் கொடுத்தனர்.

அபிஷேக் உடனே சம்பவ இடத்துக்கு வந்து பார்த்த போது, லாரியில் இருந்த துணி பண்டல்களுடன் லாரி டிரைவர் குணசேகரன் மாயமானது தெரிய வந்தது. இது தொடர்பாக அவர் ஓமலு£ர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கடத்தல் துணி பண்டல்களை விற்பனை செய்து தரும் புரோக்கர்கள் சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்த சீனிவாசன் (44), ஈரோடு வில்லரசம் பட்டி பகுதியை சேர்ந்த முரளிபாபு (48), திருச்செங்கோடு மொளசி பகுதியை சேர்ந்த பழனிவேல் (47) ஆகிய 3 பேரும் சிக்கினார்கள். விசாரணைக்கு பின் அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டார்கள்.

கைது செய்யப்பட்டவர்கள் துணி பண்டல்களை விற்பனை செய்ய முயற்சித்ததும், இந்த செயல்களுக்கு மூளையாக பழனிவேல் இருந்ததும் தெரிய வந்தது. மேலும் இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், பெருந்துறையை அடுத்துள்ள சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடத்தப்பட்ட துணி பண்டல்களை விற்பனை செய்வதற்காக வேறொரு லாரியில் கொண்டு சென்று பெருந்துறை பகுதியில் மறைத்து வைத்திருப்பதையும் ஒப்புக்கொண்டனர். இது தொடர்பாக ஓமலு£ர் போலீசார் பெருந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன், சென்னிமலை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பரமேஷ்வரன், ஏட்டு மேகநாதன் உள்ளிட்ட போலீசார் பெருந்துறை சென்னிமலை ரோடு பகுதியில் ஒரு மறைவான இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியை பறிமுதல் செய்தனர்.

அப்போது லாரியில் இருந்த சென்னிமலை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த மற்றொரு துணிநூல் புரோக்கர் விஜயகுமார் (34) கைது செய்யப்பட்டார். அதே போல் தப்பி ஓடிய டிரைவர் குணசேகரனும் பிடிபட்டு கைதானார். அதன்பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும், பறிமுதல் செய்யப்பட்ட லாரி மற்றும் துணி பண்டல்களையும் ஓமலு£ர் போலீசாரிடம் பெருந்துறை போலீசார் ஒப்படைத்தனர்.


Next Story