பெருந்துறை அருகே ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி


பெருந்துறை அருகே ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி
x
தினத்தந்தி 16 Dec 2017 3:45 AM IST (Updated: 16 Dec 2017 12:31 AM IST)
t-max-icont-min-icon

பெருந்துறை அருகே ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்தனர்.

ஈரோடு,

பெருந்துறை அருகே வாவிக்கடை திருவாச்சி பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேற்று காலை வந்தனர். அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சிவக்குமாரிடம் கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:–

மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் எங்கள் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பாத்திரக்கடை வைத்து நடத்தி வந்தார். அவருடைய மனைவி ஏலச்சீட்டு, பலகார சீட்டு நடத்தினார். நாங்கள் அவரிடம் வாரந்தோறும், மாதந்தோறும் என பணம் செலுத்தி வந்தோம். இதேபோல் ஏராளமானவர்கள் பல லட்சம் ரூபாயை சீட்டு பணமாக செலுத்தி உள்ளனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடையில் உள்ள பழைய பாத்திரங்களை அவர்கள் லாரியில் ஏற்றிக்கொண்டு இருந்தனர். நாங்களும் வியாபாரத்திற்காக கடையில் உள்ள பாத்திரங்களை லாரியில் ஏற்றுவதாக நினைத்தோம். அதன்பின்னர் சில நாட்களாக கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் அவர்களுடைய வீட்டிற்கு சென்று பார்த்தோம். அப்போது வீடும் காலிசெய்யப்பட்டு பூட்டி கிடந்தது. உடனடியாக ஏலச்சீட்டு நடத்தி வந்த பெண்ணின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது ‘சுவிட்ச் ஆப்‘ என்று வந்தது.

எனவே பல லட்சம் ரூபாயை மோசடி செய்து தலைமறைவாக உள்ள அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை மீட்டு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.


Next Story