வடமாநில கொள்ளையர்களின் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், ஜி.கே.வாசன் பேட்டி


வடமாநில கொள்ளையர்களின் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், ஜி.கே.வாசன் பேட்டி
x
தினத்தந்தி 16 Dec 2017 5:00 AM IST (Updated: 16 Dec 2017 1:38 AM IST)
t-max-icont-min-icon

வடமாநில கொள்ளையர்களின் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தஞ்சையில் ஜி.கே.வாசன் கூறினார்.

தஞ்சாவூர்,

த.மா.கா. மாநில தலைவர் ஜி.கே.வாசன் தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டங்களில் உள்ள கோவில்களில் ஐம்பொன் சிலைகள் திருட்டு தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிலைகள் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டு, சிறு கோவில்களில் உள்ள சிலைகள் எல்லாம் அங்கே பாதுகாப்பாக வைக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் இதுவரை அமைக்கப்படவில்லை. எனவே உடனே சிலைகள் பாதுகாப்பு மையம் அமைக்க வேண்டும். தமிழகத்தில் விவசாயிகளையும், விவசாயத்தையும் காக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வறட்சியின் காரணமாக 2 கோடி தென்னை மரங்கள் காய்ந்துவிட்டன. இதற்காக 2 கோடி தென்னங்கன்றுகளை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும். இதை நடவு செய்ய ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும். மேட்டூர் அணையை நம்பி காவிரி டெல்டாவில் 25 லட்சம் ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது மேட்டூர் அணையில் உள்ள தண்ணீர் 30 நாட்களுக்கு தான் போதுமானதாக இருக்கும். கர்நாடகாவில் உள்ள அணைகள் எல்லாம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. எனவே தமிழகத்திற்கு கர்நாடகஅரசு கடந்த மாதம் நவம்பர் 30–ந் தேதி வரை வழங்க வேண்டிய 63 டி.எம்.சி. தண்ணீரை கேட்டு பெற வேண்டும்.

தமிழகத்தில் ஆளும்கட்சிக்கு பெரும்பான்மை இல்லை. இடைத்தேர்தலில் பல்வேறு பிரச்சினை நடைபெற்று வருகிறது. இது போன்ற சூழ்நிலையில் கவர்னர், ஆய்வு மேற்கொள்வதை தவிர்த்து இருக்கலாம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நியாயமான முறையில் நடத்த வேண்டும் என உறுதிப்படுத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும். யார் தவறு செய்தாலும் அவர்களை வெளிச்சம்போட்டு காட்ட வேண்டும். இடைத்தேர்தலில் த.மா.கா.வினர் மனசாட்சிக்கு ஏற்ப நியாயமாக செயல்படுவார்கள். இனிமேல் தமிழகத்தில் தனிக்கட்சியால் ஆட்சி செய்ய முடியும் என்று கூற முடியாது. கூட்டணி ஆட்சி தான் நடக்கும். பாராளுமன்ற கூட்டத்தொடரில் தமிழகத்தின் பிரச்சினைக்காக எம்.பி.க்கள் குரல் கொடுக்க வேண்டும்.

வடமாநில கொள்ளையர்களை பிடிக்க சென்ற இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டு கொள்ளப்பட்டது வேதனை அளிக்கிறது. இனிமேல் வடமாநிலங்களுக்கு கொள்ளையர்களை பிடிக்க செல்லும் குழுவில் கூடுதல் போலீஸ் அதிகாரிகள் இடம் பெற வேண்டும். தமிழகத்தில் வடமாநில கொள்ளையர்களின் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தால் தான் சட்டம்–ஒழுங்கு முறைப்படும். இரும்பு கரம் கொண்டு போலீசார் ஒடுக்க வேண்டும். வடமாநிலங்களில் இருந்து வந்து தமிழகத்தில் வேலை பார்த்து வருபவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

ரஜினிகாந்த் தொடங்கும் கட்சியுடன் த.மா.கா. இணைக்கப்படும் என்ற யூகத்திற்கு, ஜோதிடத்திற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை. ரஜினிகாந்த் எப்போது கட்சியை தொடங்குவார் என நீங்கள்(நிருபர்கள்) கேட்டு சொல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story