நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்தேன் கைதான கட்டிட தொழிலாளி வாக்குமூலம்


நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்தேன் கைதான கட்டிட தொழிலாளி வாக்குமூலம்
x
தினத்தந்தி 17 Dec 2017 2:00 AM IST (Updated: 16 Dec 2017 7:01 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே பெண் கொலை வழக்கில் கைதான கட்டிட தொழிலாளி, மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கழுத்தை நெரித்து கொன்றதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி அருகே பெண் கொலை வழக்கில் கைதான கட்டிட தொழிலாளி, மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கழுத்தை நெரித்து கொன்றதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

கட்டிட தொழிலாளி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா அம்மாபட்டியைச் சேர்ந்தவர் பேச்சியப்பன்(வயது 48). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி பரமேசுவரி(45). இவர்களுக்கு மணிமேகலை என்ற மகளும், சுந்தர்(16), ஆனந்த்(13) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். மணிமேகலைக்கு திருமணமாகி விட்டது.

இந்த நிலையில் பேச்சியப்பன் தன்னுடைய மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி அவரிடம் தகராறு செய்து வந்தார். இதனால் பரமேசுவரி கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய கணவரிடம் கோபித்துக் கொண்டு, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கடலையூரில் உள்ள தன்னுடைய தந்தை சுந்தரலிங்கத்தின் வீட்டுக்கு மகன்களுடன் சென்று விட்டார்.

கழுத்தை நெரித்துக் கொலை

இதையடுத்து கடந்த 14–ந்தேதி பேச்சியப்பன் தன்னுடைய மனைவி, மகன்களை சமாதானப்படுத்தி அழைத்து செல்வதற்காக கடலையூருக்கு சென்றார். பின்னர் நேற்று முன்தினம் மாலையில் பரமேசுவரி அங்குள்ள தனது தந்தையின் தோட்டத்துக்கு சென்றார். அப்போது பேச்சியப்பனும் தன்னுடைய மனைவியுடன் சென்றார்.

தோட்டத்தில் கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த பேச்சியப்பன் தனது மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்.

நடத்தையில் சந்தேகம்

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூடி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்ட பரமேசுவரியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பேச்சியப்பனை கைது செய்தனர். கைதான பேச்சியப்பன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், தன்னுடைய மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக தெரிவித்தார்.


Next Story