ஜாமீனில் வெளியே வந்தவர் தொடர்ந்த வழக்கில் மாதத்தின் முதல் வேலை நாளில் ஆஜராகி கையெழுத்திட அனுமதி
மதுரை கான்பாளையத்தை சேர்ந்தவர் ஞானேஸ்வரன்.
மதுரை,
மதுரை கான்பாளையத்தை சேர்ந்தவர் ஞானேஸ்வரன். இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
மோசடி வழக்கில் எனக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து நான் தொடர்ந்த வழக்கில், மாதத்தின் முதல் வேலை நாளில், மதுரை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென்ற நிபந்தனையின் பேரில் எனக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்தநிலையில், ஐகோர்ட்டு நிபந்தனையை நிறைவேற்ற செல்ல இருந்தநிலையில், மாதத்தின் முதல் இரு நாட்களும் விடுமுறை விடப்பட்டது. மறுநாள் காய்ச்சல் காரணமாக என்னால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை. இதன் பிறகு 4–ம் நாள் நான் நீதிமன்றத்தில் ஆஜரானேன். மருத்துவ சான்றுகளுடன் காரணத்தை கூறி தாமதத்தை ஏற்க வேண்டுமென மனு செய்தேன். இதை ஏற்க நீதிமன்றம் மறுத்து விட்டது. மேலும், என் தரப்பில் தாக்கல் செய்த 2 மெமோக்களையும் திருப்பி அனுப்பியது. சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஒவ்வொரு விசாரணையின்போதும் தவறாமல் ஆஜராகியுள்ளேன். தொடர்ந்து விடுமுறையும், உடல் நலக்குறைவாலும் தான் என்னால் ஆஜராக முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, ஐகோர்ட்டு விதித்த நிபந்தனைப்படி, மாதத்தின் முதல் வேலை நாளில் ஆஜராகி, நான் கையெழுத்திட அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் ஒய்.கிருஷ்ணன்ஆஜரானார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, விடுமுறை மற்றும் உடல்நலக்குறைவால் நீதிமன்ற நிபந்தனையை நிறைவேற்ற முடியவில்லை என்பதற்கான மருத்துவ சான்றுகள் மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதலில் நிபந்தனையை நிறைவேற்ற முடியாத நிலையில் அடுத்தடுத்து நிறைவேற்ற தயாராக உள்ளார். எனவே, ஆஜராவதில் ஏற்பட்ட தாமதத்தை ஏற்றுக் கொண்டு மனுதாரர் தொடர்ந்து ஆஜராகி கையெழுத்திட மதுரை சி.பி.ஐ. நீதிமன்றம் அனுமதிக்க வேண்டுமென உத்தரவிட்டார்.