கோபியில் ரூ.500 லஞ்சம் வாங்கிய சார்பதிவாளருக்கு 8 ஆண்டு சிறை
கோபியில் ரூ.500 லஞ்சம் வாங்கிய சார் பதிவாளருக்கு 8 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ். கோபியில் உள்ள ஒரு முதியோர் காப்பகத்தில் ஆலோசகராக உள்ளார். கடந்த 2004–ம் ஆண்டு அந்த காப்பகத்தின் ஆண்டு அறிக்கையை பதிவு செய்வதற்காக கோபியில் உள்ள மாவட்ட சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு சீட்டு மற்றும் சங்கங்கள் பிரிவின் சார்பதிவாளராக பணியாற்றி வந்த தங்கவேல்(வயது 62) என்பவர் ஆண்டு அறிக்கையில் உள்ள தவறை மறைத்து பதிவு செய்வதற்கு ரூ.500 லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத புஷ்பராஜ் இதுபற்றி ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பின்பு போலீசாரின் ஆலோசனைபடி புஷ்பராஜ், கோபியில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் வைத்து தங்கவேலிடம் ரசாயனம் தடவிய ஐந்து 100 ரூபாய் நோட்டுகளை கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்து நின்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் தங்கவேலுவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர் மீது ஈரோடு முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த மாஜிஸ்திரேட்டு மலர்வாலண்டினா நேற்று தீர்ப்பு கூறினார்.
லஞ்சம் வாங்கிய தங்கவேலுக்கு 8 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து போலீசார் தங்கவேலுவை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். ஏற்கனவே லஞ்சம் பெற்ற புகார் தொடர்பாக தங்கவேல் கடந்த 2007–ம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.