மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் நாகல்நகரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநில துணை பொதுச்செயலாளர் பரசுராமன் தலைமை தாங்கினார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் நாகல்நகரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநில துணை பொதுச்செயலாளர் பரசுராமன் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் ஆரோக்கியதாஸ் வரவேற்றார். தெற்கு மாவட்ட தலைவர் மணி, மாவட்ட செயலாளர் சிவக்குமார், வடக்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலால் இறந்த மீனவர்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். இறந்த மீனவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் நிவாரண பணிகளை விரைவாக செய்ய வேண்டும்.
ஆர்ப்பாட்டத்தில், காணாமல் போன மீனவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் அரசு முறையாக நிவாரணம் வழங்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் மாநில துணைத்தலைவர் கோபால் உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.