காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்பு: பா.ஜ.க.வுக்கு பாடம் புகட்டும் வல்லமை படைத்தவர் அமைச்சர் நமச்சிவாயம் பெருமிதம்
காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள ராகுல்காந்தி, பா.ஜ.க. ஆட்சிக்கு பாடம் புகட்டும் வல்லமை படத்த தலைவர் என்று புதுவை மாநில தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் கூறி உள்ளார்.
புதுச்சேரி,
புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட நேரு, நாட்டிற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, பதவியை துச்சமென நினைத்து நாட்டின் ஒற்றுமையை காத்து நிற்கும் சோனியா காந்தி ஆகியோர் தேச நலனுக்காக அயராது பாடுபட்டனர்.
தூய தலைவர்கள் காட்டிய பாதையில் பயணித்து அடித்தட்டு மக்கள் நலனுக்காகவும், கிராமங்களின் வளர்ச்சிக்காகவும், விவசாயிகளின் முன்னேற்றத்திற்காகவும், நவீன இந்தியாவை உருவாக்கவும் அல்லும் பகலும் அயராது பாடுபட்டுக்கொண்டிருக்கும் ராகுல் காந்தி அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று இருப்பது இந்திய நாட்டிற்கு ஒரு புதிய உத்வேகத்தை தந்துள்ளது.
மதவாத சக்திகளை ஊக்குவித்து, மக்கள் விரோத சட்டங்களை சர்வாதிகாரமாக திணித்து நாட்டுமக்களை அனுதினமும் அல்லல்பட வைத்துக்கொண்டிருக்கும் மத்திய பாரதீய ஜனதா ஆட்சிக்கு பாடம் புகட்டவும் மக்கள் விரோத ஆட்சிக்கு மாற்று சக்தியாக காங்கிரஸ் பேரியக்கத்தை மாற்றும் வல்லமை படைத்த தலைவர் ராகுல் காந்தி தான் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் உருவாகி உள்ளது.
நாடு நலம் பெற, நல்லாட்சி மலர்ந்திட, இந்திய தேசம் ஏற்றமிகு வளர்ச்சி காண, பொருளாதாரத்தில் புரட்சி படைத்திட, வல்லரசு நாடு களுக்கு இணையாக இந்தியாவை முன்னேற்ற வளமான, வலிமையான, அமைதியான, மதசார்பற்ற நாடாக இந்தியாவை உருவாக்க தன்னலமற்ற தனிப்பெரும் தலைவனாக இளைய சமுதாயத்தின் ஒட்டுமொத்த நம்பிக்கையாக விளங்கும் ஓய்வறியாமல் உழைத்துக் கொண்டிருக்கும் ஒப்பற்ற தலைவர் ராகுல் காந்தியின் பின்னால் அனைவரும் அணிவகுப்போம். இந்திய நாட்டின் கலங்கரை விளக்காக அனைவருக்கும் வழிகாட்டும் கண்ணிய தலைவர் ராகுல்காந்தி அவர்களோடு கை கோர்ப்போம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.