ரூ.30 லட்சம் கொள்ளை வழக்கில் தேடப்பட்ட 6 பேர் வால்பாறையில் கைது


ரூ.30 லட்சம் கொள்ளை வழக்கில் தேடப்பட்ட 6 பேர் வால்பாறையில் கைது
x
தினத்தந்தி 18 Dec 2017 4:45 AM IST (Updated: 18 Dec 2017 12:35 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டியில் நடந்த ரூ.30 லட்சம் கொள்ளை வழக்கில் தேடப்பட்ட 6 பேரை போலீசார் வால்பாறையில் கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 2 பேரும் சிக்கினர்.

வால்பாறை,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட வங்கியில் இருந்து கடந்த 13-ந் தேதி ஒருவர் ரூ.30 லட்சத்தை எடுத்துக்கொண்டு காரில் சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற 8 பேர் அடங்கிய வழிப்பறி கும்பல் விழுப்புரம் சுங்கச்சாவடி அருகே போலீஸ் அதிகாரிகள் போன்று வேடமணிந்து, காரை சோதனை செய்வது போல் நடித்து, அவரிடம் இருந்த ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர். மற்ற 5 பேரை வலைவீசி தேடி வந்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட 2 பேரிடம் விக்கிரவாண்டி போலீசார் விசாரணை நடத்திய போது வழிப்பறி கொள்ளை கும்பல் வால்பாறையில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.

இதன் பேரில் விக்கிரவாண்டி போலீஸ் உயர் அதிகாரிகள் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்திக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் தலைமையில் போலீசார் ஏற்கனவே கைது செய்யப்பட்ட 2 பேரையும் உடன் அழைத்துக் கொண்டு வால்பாறைக்கு வந்தனர். கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி உத்தரவின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் தலைமையில் வால்பாறை போலீசார், விக்கிரவாண்டி போலீசாருடன் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.

அப்போது கொள்ளை கும்பல் வால்பாறை சோலையார் அணை பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த தங்கும் விடுதிக்குள் போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை செய்தனர். அப்போது கொள்ளை கும்பலை சேர்ந்த 6 பேர் அங்கு தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள் விவரம் வருமாறு:- ஈரோடு சென்னிமலையை சேர்ந்த சண்முகம் (வயது 42), ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த பேச்சிமுத்து (30), நெல்லையை சேர்ந்த தேவதாஸ் (40), ஸ்ரீவில்லிப்புத்தூரை சேர்ந்த முருகன் (32), கோவை காளப்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் (34), தூத்துக்குடி திருவேங்கடம் பகுதியை சேர்ந்த நடராஜன் (23).மேலும் இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக வால்பாறை முருகாளி எஸ்டேட் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (46), கலியாணபந்தல் எஸ்டேட்டை சேர்ந்த இளங்கோவன் (36) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மொத்தம் 8 பேரையும் போலீசார் விக்கிரவாண்டிக்கு அழைத்து சென்றனர்.

மேலும் அவர்கள் விக்கிரவாண்டியில் இருந்து வால்பாறைக்கு தப்பி வந்த காரையும் பறிமுதல் செய்தனர். கொள்ளையர்கள் வால்பாறையில் பதுங்கி இருந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story