திருட்டு போன லாரி ஒரு மணி நேரத்தில் மீட்பு 2 பேர் கைது


திருட்டு போன லாரி ஒரு மணி நேரத்தில் மீட்பு 2 பேர் கைது
x
தினத்தந்தி 17 Dec 2017 11:00 PM GMT (Updated: 2017-12-18T03:02:04+05:30)

திருச்சி அருகே திருட்டு போன லாரியை போலீசார் ஒரு மணி நேரத்தில் மீட்டனர். மேலும் லாரியை திருடி ஓட்டிச்சென்ற 2 பேரை கைது செய்தனர்.

கொள்ளிடம் டோல்கேட்,

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கா நகரை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் கணேசன்(வயது 31). இவர் சொந்தமாக 5 லாரிகள் வைத்து வாடகைக்கு விட்டு தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் லாரிகளை நிறுத்த கணேசன் வீட்டில் போதிய இடவசதி இல்லாததால், நெ.1 டோல்கேட், பேங்க் காலனியில் உள்ள அவருடைய சகோதரி லதா என்பவரின் வீட்டின் அருகே லாரிகளை தினமும் நிறுத்தி வைப்பது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு அவர் லாரிகளை அங்கு நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

பின்னர் நேற்று அதிகாலை 3 மணியளவில் வேலைக்கு செல்வதற்காக லாரியை எடுக்க கணேசன் வந்து பார்த்தபோது நிறுத்திய இடத்தில் ஒரு லாரி மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து லாரியை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. உடனடியாக கணேசன் இதுகுறித்து கொள்ளிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் மற்றும் போலீசாரிடம் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் திருட்டு போன லாரி குறித்து பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு வயர்லெஸ் மைக் மூலம் தகவல் தெரிவித்தனர். இதனைதொடர்ந்து கல்லக்குடியில் 3.50 மணிக்கு ரோந்து பணியில் இருந்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் சந்தேகத்திற்குரிய வகையில் வேகமாக வந்த ஒரு லாரியை மடக்கி நிறுத்தி அதில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் பொன்மலை மிலிட்டரி காலனியை சேர்ந்த வில்சென்ட்(45), திருச்சி மேல அம்பிகாபுரத்தை சேர்ந்த ராஜ்குமார்(45) என்பதும், அவர்கள்தான் நெ.1 டோல்கேட்டில் இருந்து லாரியை திருடி ஓட்டி வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து லாரியை மீட்டு கொள்ளிடம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்த திருட்டு சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட வில்சென்ட், ராஜ்குமார் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இதேபோன்று பல்வேறு இடங்களில் நின்ற லாரிகளை கள்ளச்சாவி போட்டு திருடி வேறு மாவட்டங்களுக்கு ஓட்டி சென்று நிறுத்தி அதிலிருந்து டயர், பேட்டரி உள்ளிட்ட பாகங்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. திருட்டுபோன ஒரு மணி நேரத்தில் லாரியை போலீசார் மீட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story