குடும்பத்தகராறு மாமனார், மாமியார் உள்பட 3 பேருக்கு வெட்டு வாலிபர் கைது
குடும்பத்தகராறில் மாமனார், மாமியார் உள்பட 3 பேரை கத்தியால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நேரு நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 32). பெயிண்டர். இவர் அதே பகுதியை சேர்ந்த புஷ்பா (27) என்பவரை திருமணம் செய்து கொண்டார். புஷ்பா திருத்தணியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் அடிக்கடி புஷ்பா தனது தாய் வீட்டுக்கு சென்றுவிடுவார். இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று மீண்டும் புஷ்பா தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். தன்னுடைய மனைவியை அழைத்து வருவதற்காக சீனிவாசன் அங்கு சென்றார். அப்போது கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த சீனிவாசன் தன்னுடைய மனைவி புஷ்பாவை அடித்து உதைத்தார். இதை பார்த்த அவரது மாமனார் ராகவன் (55) இது குறித்து தட்டிக்கேட்டார். அப்போது ஆத்திரம் அடைந்த சீனிவாசன் அவரை தகாத வார்த்தையால் பேசி தான் வைத்திருந்த கத்தியால் ராகவனின் கழுத்தை வெட்டினார்.
இதையடுத்து ராகவனின் மனைவி கவுரி (45) மற்றும் உறவினர் மணிகண்டன் (28) தடுக்க முயன்றனர். அவர்களுக்கும் கத்தியால் வெட்டு விழுந்தது.
இதில் காயம் அடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசனை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.