‘கலபுரகியில் மகளிர் பொருளாதார பூங்கா’ சித்தராமையா பேச்சு


‘கலபுரகியில் மகளிர் பொருளாதார பூங்கா’ சித்தராமையா பேச்சு
x
தினத்தந்தி 17 Dec 2017 11:45 PM GMT (Updated: 2017-12-18T05:15:06+05:30)

கலபுரகியில் மகளிர் பொருளாதார பூங்கா அமைக்கப்பட உள்ளது வட கர்நாடகத்திற்கு காங்கிரஸ் அரசின் மற்றொரு பரிசு என்று சித்தராமையா கூறினார்.

கலபுரகி,

கர்நாடக அரசின் தொழில்துறை சார்பில் மகளிர் தொழில்முனைவோர் பொருளாதார பூங்காவுக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்–மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பேசியதாவது:–

கலபுரகியில் மகளிர் பொருளாதார பூங்கா அமைக்கப்பட உள்ளது, வட கர்நாடகத்திற்கு காங்கிரஸ் அரசின் மற்றொரு பரிசு. இது எனது கனவு திட்டம். தொழில்துறை என்வசம் இருந்தபோது நாட்டிலேயே பெண் தொழில்முனைவோருக்காக மகளிர் பொருளாதார பூங்கா அமைக்க தீர்மானிக்கப்பட்டது. பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்க அரசு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. ஐதராபாத்–கர்நாடக பகுதியில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தவும் நாங்கள் முன்னுரிமை அடிப்படையில் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறோம்.

ராமநகர் மாவட்டம் ஹாரோஹள்ளி, மைசூரு மாவட்டம் இம்மாவு, பல்லாரி மாவட்டத்தில் குடிதினி, தட்சிண கன்னடா மாவட்டத்தில் பஜேரு, உப்பள்ளி புறநகர் ஆகிய பகுதிகளிலும் இந்த மகளிர் பொருளாதார பூங்காவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் தலைமை செயலாளர் ரத்னபிரபாவின் பங்கு முக்கியமானது.

இந்த மகளிர் பொருளாதார பூங்காவுக்காக ரூ.7.31 கோடி செலவில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க டெண்டருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு(2018) மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.Next Story