பொய்யே பா.ஜனதா தலைவர்களின் குலதெய்வம் சித்தராமையா பேச்சு
பொய்யே பா.ஜனதா தலைவர்களின் குலதெய்வம் என்று சித்தராமையா கூறினார்.
கலபுரகி,
கர்நாடகத்தில் ஆட்சியை பிடித்து முதல்–மந்திரி ஆகிவிடலாம் என்று எடியூரப்பா கனவு காண்கிறார். அவர் காற்றில் கோபுரத்தை கட்டிக்கொண்டு சுற்றுகிறார். ஆனால் அவர் நினைத்தப்படி எதுவும் நடக்காது. ஒருமையில் திட்டினால் நான் பயந்துவிடுவேன் என்று நினைத்து எடியூரப்பா பேசுகிறார். எடியூரப்பாவை போல் 100 பேர் வந்தாலும் நான் அஞ்ச மாட்டேன்.
பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா ஒரு கூட்டத்தில் பேசும்போது, நாங்கள் ஆட்சியில் இருந்தபோது ஒன்றும் செய்யவில்லை. ஆனால் பொய் சொல்லி மக்களை நம்ப வைக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். பொய்யே பா.ஜனதா தலைவர்களின் குலதெய்வம். இப்படி பொய் பேசுபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்க வேண்டுமா? என்று யோசித்து பாருங்கள்.சட்டசபை தேர்தலில் 70 தொகுதிகளில் வெற்றி பெறுவதே கடினம் என்று அந்த கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கூறி இருக்கிறார். அதனால் கர்நாடகத்தில் மதக்கலவரத்தை ஏற்படுத்தி வன்முறையில் ஈடுபடும்படி அவர் பா.ஜனதா தலைவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். இதை அக்கட்சியை சேர்ந்த பிரதாப்சிம்ஹாவே பகிரங்கப்படுத்தி இருக்கிறார்.
சமுதாயத்தை உடைக்கும் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் மாநிலம் தீ பற்றி எரியும். நாங்கள் 5 ஆண்டுகளில் செய்த பணிகளை வேறு எந்த அரசும் செய்தது இல்லை. ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது மாநிலத்தை கொள்ளையடித்து ருசி கண்ட பா.ஜனதாவினர் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முயற்சி செய்கிறார்கள்.இவ்வாறு சித்தராமையா பேசினார்.
Related Tags :
Next Story