கோவை மத்திய சிறையை முற்றுகையிட முயன்ற இந்திய தேசிய லீக் கட்சியை சேர்ந்த 109 பேர் கைது


கோவை மத்திய சிறையை முற்றுகையிட முயன்ற இந்திய தேசிய லீக் கட்சியை சேர்ந்த 109 பேர் கைது
x
தினத்தந்தி 19 Dec 2017 3:30 AM IST (Updated: 19 Dec 2017 12:33 AM IST)
t-max-icont-min-icon

மதுரையை சேர்ந்த ஜெயிலர் ஜெயபிரகாஷ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சையது ஜாபர் அகமது கடந்த 20 ஆண்டுகளாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

கோவை,

மதுரையை சேர்ந்த ஜெயிலர் ஜெயபிரகாஷ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சையது ஜாபர் அகமது கடந்த 20 ஆண்டுகளாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை விடுதலை செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சிறைத்துறை நிர்வாகம் பரிசீலனை செய்து, சையது ஜாபர் அகமதுவை விடுதலை செய்ய வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் சிறைத்துறை நிர்வாகம் எவ்வித பரிசீலனையும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

எனவே சிறைத்துறை நிர்வாகத்தை கண்டித்து இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் கோவை மத்திய சிறையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. இதை தொடர்ந்து அந்த கட்சியின் மாநில தலைவர் தடா ரகீம் தலைமையில் கட்சியினர் கோவை மத்திய சிறையை நோக்கி சென்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்கள் அனைவரையும் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் உள்பட 109 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.


Next Story