கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் மறுதேர்வு கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி மாணவ– மாணவிகள் தர்ணா போராட்டம்
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் மறுதேர்வு கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி மாணவ– மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடவள்ளி,
கோவை வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் உள்ள 14 உறுப்பு கல்லூரிகள், 21 இணைப்பு கல்லூரிகளில் சுமார் 11 ஆயிரத்து 200 பேர் படித்து வருகின்றனர். அதில் 13 பாடப்பிரிவுகள் உள்ளன. ஆண்டுதோறும் நடத்தப்படும் தேர்வில் தோல்வியடையும் மாணவ– மாணவிகளுக்கு மறுதேர்வு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு வரை மறுதேர்வு எழுத ஒரு பாடத்துக்கு ரூ.200 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அந்த கட்டணம் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் 20–ந் தேதி வேளாண் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இளமுருகு அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பினார்.
அதில், மறுதேர்வு எழுத ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும், 133–வது அகாடமி கவுன்சில் முடிவின்படி மறு தேர்வு கட்டணமாக முதல் முறையாக எழுதுபவர்களுக்கு ஒரு பாடத்துக்கு ரூ.1000, 2–வது முறை எழுதுபவர்களுக்கு ரூ.2 ஆயிரம், 3–வது முறை அல்லது அதற்கு மேல் எழுதுபவர்களுக்கு ரூ.3 ஆயிரம் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை 9 மணிக்கு வேளாண் பல்கலைக்கழக 2–ம் ஆண்டு மாணவ– மாணவிகள் 700 பேர் வகுப்புகளை புறக்கணித்து அங்குள்ள நிர்வாக வளாகத்தின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ– மாணவிகள் பெரும்பாலும் ஏழைகள். கடந்த ஆண்டு வரை மறுதேர்வுக்கு ரூ.200 மட்டுமே வசூலிக்கப்பட்டது. ஆனால் தற்போது மிக அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த பணத்தை எப்படி செலுத்துவது? என தெரியவில்லை. மீண்டும் பழைய கட்டணத்தையே நிர்ணயிக்க வேண்டும் என்றனர்.
இதையடுத்து காலை 10.30 மணிக்கு அங்கு வந்த பல்கலைக்கழக டீன் மகிமைராஜா, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இளமுருகு, பதிவாளர் சுதாகர் மற்றும் பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ– மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் மாணவ– மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மீண்டும் மதியம் 2 மணிக்கு டீன் மகிமைராஜா, பேராசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மறுதேர்வுக்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து மாணவ– மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.