ஜெப கூடம் இடிக்கப்பட்டதால் கதறி அழுதபடி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பெண்களால் பரபரப்பு
காங்கேயம் அருகே ஜெப கூடம் இடிக்கப்பட்டதால் கதறி அழுதபடி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்,
திருப்பூரை அடுத்த காங்கேயம் தாலுகா படியூர் அருகே கணபதிபாளையம் அண்ணா நகரை சேர்ந்த ஆதிதிராவிட மக்கள் 50–க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
எங்கள் பகுதியில் மத வழிபாடு செய்வதற்காக இடம் வேண்டி கணபதிபாளையம் ஊராட்சியில் விண்ணப்பம் செய்தோம். கடந்த 2016–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் எங்களுக்கு அனுமதி கொடுத்தார்கள். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் கட்டிடம் அமைத்து வழிபாடு நடத்தி வந்தோம். யாருக்கும் எந்தவித இடையூறும் இல்லாமல் இருந்தோம். இந்தநிலையில் வெளியூரை சேர்ந்த பிற மதத்தினர் கடந்த 10–ந் தேதி எங்கள் பகுதிக்கு வந்து இங்கு பிரார்த்தனை செய்யக்கூடாது என்று இடையூறு ஏற்படுத்தினார்கள்.
எனவே நாங்கள் கணபதிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் அனுமதியுடன் கட்டிடம் கட்டியதை கிறிஸ்தவ ஜெப கூடமாக அங்கீகரித்து பட்டா மற்றும் அனுமதி வழங்க வேண்டும். மேலும் ஞாயிற்றுக்கிழமைதோறும் நாங்கள் வழிபாடு நடத்த தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.
இந்தநிலையில் மனு கொடுத்து விட்டு காங்கேயம் செல்வதற்குள், காங்கேயம் தாசில்தார் மாணிக்கவேலு மற்றும் போலீசார் சென்று அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட கிறிஸ்தவ ஜெப கூடத்தை இடித்து அப்புறப்படுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆதிதிராவிட மக்கள் மீண்டும் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் முக்கிய நிர்வாகிகளை மட்டும் கலெக்டரிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச்சென்றனர். இந்த பிரச்சினை தொடர்பாக தாராபுரம் சப்–கலெக்டர் அலுவலகத்தில் விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டார்.
ஆனால் அவர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலகம் முன் தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தாங்கள் வழிபாடு செய்வதற்கு ஜெப கூடம் கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும், ஜெப கூடத்தை இடித்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதுகுறித்து அறிந்ததும் திருப்பூரில் உள்ள கிறிஸ்தவ மக்களும் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர். பெண்கள் அனைவரும் அழுதபடி இருந்தனர். அதன்பிறகு நேற்று மாலை கலெக்டரை மீண்டும் சந்தித்து முறையிட்டனர். அப்போது கலெக்டர், பட்டா உள்ள இடத்தில் ஜெப கூடம் அமைப்பதற்கும், வழிபாடு நடத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும். மேலும் இதுதொடர்பாக தாராபுரம் சப்–கலெக்டர் விசாரணை நடத்துவார் என்று கூறியதை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.