புழலில் ஹார்டுவேர்ஸ் கடையில் தீ விபத்து
புழலில் ஹார்டுவேர்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமடைந்தது.
செங்குன்றம்,
சென்னையை அடுத்த புழல், விநாயகபுரத்தை சேர்ந்தவர் அருணாசலம்(வயது 48). விநாயகபுரம்–செம்பியம் சாலையில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.
நேற்று அதிகாலை 4 மணியளவில் கடையில் இருந்து திடீரென புகை வந்ததுடன் தீப்பிடித்தும் எரிந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து கடையின் உரிமையாளர் அருணாசலத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக கடைக்கு விரைந்து சென்றார்.
மேலும், செம்பியம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கடையின் முன்பக்க இரும்பு கதவை உடைத்து உள்ளே புகுந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும் கடையில் இருந்த பெயிண்ட் உள்ளிட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமடைந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் புழல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது மின்கசிவு காரணமாக கடையில் தீப்பிடித்தது தெரியவந்தது.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.