குடிபோதையில் தகராறு கூலித்தொழிலாளி கல்லால் அடித்து கொலை; வாலிபர் கைது


குடிபோதையில் தகராறு கூலித்தொழிலாளி கல்லால் அடித்து கொலை; வாலிபர் கைது
x
தினத்தந்தி 19 Dec 2017 3:00 AM IST (Updated: 19 Dec 2017 1:47 AM IST)
t-max-icont-min-icon

திருமங்கலம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கூலித்தொழிலாளியை கல்லால் அடித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருமங்கலம்,

திருமங்கலம் தாலுகா நடுக்கோட்டை அரண்மணை தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 52). கூலி தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. மேலும் திருமணமாகி குழந்தை இல்லாதநிலையில், மனைவியை பிரிந்து வசித்து வந்தார். அதே ஊரை சேர்ந்தவர் திருமணமாகாத ராஜபாண்டி (வயது 31). இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி மது அருந்துவார்களாம்.

இந்தநிலையில் நேற்று பாண்டியராஜன் பணம் கொடுத்து ராஜபாண்டியை மதுவாங்கி வர கூறினாராம். அவர் மதுபாட்டிலை கொண்டு வந்ததும், அதை அங்குள்ள மாட்டு கொட்டகையில் வைத்து பாண்டியராஜன் குடித்துள்ளார். அப்போது 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டது. அதில் ஒருவரையொருவர் தாக்கியபடி கட்டி புரண்டு சண்டை போட்டனர்.

அப்போது ஆத்திரமடைந்த ராஜபாண்டி காலால், பாண்டியராஜனை எட்டி உதைத்தார். அவர் கீழே விழுந்ததும், அருகில் இருந்த பெரிய கல்லை தூக்கி தலையில் போட்டு விட்டு ராஜபாண்டி தப்பி ஓடிவிட்டாராம். அதில் ரத்த வெள்ளத்தில் பலத்த காயமடைந்த பாண்டியராஜன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது துரைப்பாண்டி (62) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த ராஜபாண்டியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story