ஓடும் பஸ்சில் வாலிபர் கொலை: 8 பேர் கைது; 3 பேருக்கு வலைவீச்சு
வாடிப்பட்டி அருகே ஓடும் பஸ்சில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் 8 பேரை கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
வாடிப்பட்டி,
மதுரை கரிமேட்டை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் மகன் அமரேஷ் என்ற அமர் (வயது 22). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டிலிருந்து மதுரைக்கு அரசு பஸ்சில் வந்தார். அப்போது வாடிப்பட்டியை அடுத்த தனிச்சியம் பிரிவு அருகே பஸ்சை வழிமறித்து காரில் வந்த மர்மகும்பல் அமரை சரமாரியாக வெட்டி பஸ்சுக்குள்ளே படுகொலை செய்தது.
விசாரணையில் அமர் 2011–ம் ஆண்டு மதுரையில் ராம்பிரசாத் என்பவர் கொலையில் சம்பந்தப்பட்டு இருந்ததும், அந்த கொலைக்கு பழிக்கு பழியாக அவர் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. மேலும் அச்சம்பத்து சுடுகாடு அருகே கொலையாளிகள் பயன்படுத்திய கார், கத்தி, அரிவாள்களை போலீசார் கைப்பற்றினர்.
கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் முத்துபாண்டி, அன்னராஜ், முத்து, குற்றவியல் சப்–இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தகுமார், வெங்கடேஷ், முத்துகுமார் கொண்ட 3 தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி வந்த நிலையில் ராம்பிரசாத்தின் அண்ணன் சிறப்புபிரகாஷ் (28) என்பவர் தலைமையில் அவரது நண்பர்கள் மேலபொன்னகரத்தை சேர்ந்த அருண்குமார் (25), அரவிந்த் (21), சத்தியமூர்த்தி (24), ராமர் (23), சுரேஷ்(23), கடலாடி முனீஸ்வரன் (24), விசுவாசபுரி கார்த்திகை செல்வம் (22), புட்டுதோப்பு சரத்பாபு (22) ஆகியோருடன் சிலர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து நேற்று தனிப்படை போலீசார் அருண்குமார், அரவிந்த் உள்பட 8 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் சிறப்பு பிரகாஷ் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.