ரூ.2 ஆயிரம் கோடி ஒப்பந்த பணியை சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு வழங்க வேண்டும் கலெக்டரிடம் மனு


ரூ.2 ஆயிரம் கோடி ஒப்பந்த பணியை சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு வழங்க வேண்டும் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 19 Dec 2017 4:30 AM IST (Updated: 19 Dec 2017 2:49 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி பாய்லர் ஆலையின் ரூ.2 ஆயிரம் கோடி ஒப்பந்த பணியை சிறு, குறு என்ஜினீயரிங் தொழிற்சாலைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் ராஜாமணி, மாவட்ட வருவாய் அதிகாரி பஷீர் உள்பட அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்கள். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திருவெறும்பூர் ஒன்றியக்குழு செயலாளர் நடராஜன் தலைமையில் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர்.

அதில், திருவெறும்பூர், துவாக்குடி பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட சிறு, குறு என்ஜினீயரிங் தொழிற்சாலைகள் உள்ளன. அந்த தொழிற்சாலைகளில் திருச்சி பாய்லர் ஆலை தொடங்கப்பட்டதில் இருந்து, அதற்கு தேவையான உதிரிபாகங்களை தயாரித்து கொடுத்து வந்தனர். ஆனால் கடந்த 2010-ம் ஆண்டு முதல் பாய்லர் ஆலையானது உதிரிபாகங்கள் தயாரிப்பதற்கு அந்த சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு ஒப்பந்த பணி கொடுப்பதை குறைத்து விட்டது. இதனால் அந்த தொழிற்சாலைகளில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு பாய்லர் ஆலைக்கு கிடைத்துள்ள ஆர்டருக்கு தேவையான உதிரிபாகங்கள் தயாரிப்பதற்கு சிறு, குறு என்ஜினீயரிங் தொழிற்சாலைகளுக்கு ஒப்பந்த பணி வழங்காமல் ராஜஸ்தான் மாநிலம் நாக்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு சுமார் ரூ.2 ஆயிரம் கோடிக்கு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சிறு, குறு தொழிற்சாலை தொழிலாளர்கள் முற்றிலும் பாதிக்கப்படுவார்கள்.

எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இதில் தலையிட்டு, பாய்லர் ஆலையானது நாக்பூரில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு கொடுத்துள்ள ஒப்பந்த பணியை ரத்து செய்து விட்டு திருவெறும்பூர், துவாக்குடி பகுதிகளில் உள்ள சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்தவர்கள் திருச்சி மாநகர, மாவட்ட செயலாளர் லெனின் தலைமையில் சுமார் 30 அடி நீள கோரிக்கை மனுவுடன் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் இருந்து ஊர்வலமாக வந்து கலெக்டரிடம் கொடுத்தனர். அதில், திருச்சி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாக காரணம் காட்டி உயர்நீதி மன்றத்தில் அனுமதி பெற்று கபடி போட்டி நடத்த வேண்டும் என்ற உத்தரவு உள்ளது. இதனால் கபடி போட்டி நடத்துவதற்கு அனுமதி வாங்குவதற்கு உயர்நீதிமன்றத்துக்கு சென்று வருவதால் அலைச்சலும், அதிக செலவுகளும் ஏற்படுகிறது.

இதனால் கபடி விளையாட்டு மீதான ஆர்வம் வீரர்களிடம் குறைந்து வருகிறது. எனவே திருச்சி மாவட்டத்தில் கபடி போட்டி நடத்துவதற்கு அனுமதி வாங்குவதற்கு உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி போலீசார் மூலம் அனுமதி பெற்று போட்டிகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

வெல்பேர் கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர் ஜமால் முகமது, மாநகர, மாவட்ட செயலாளர் சிராஜ்தீன் ஆகியோர் தலைமையில் கட்சியினர் திருச்சி மாநகராட்சி 19-வது வார்டுக்கு உட்பட்ட காஜாமொய்தீன் தெருவில் கழிவுநீரை தூர்வார வேண்டும். சப்-ஜெயில் பகுதியில் சாலையில் வேகத்தடை அமைக்கவும், 48-வது வார்டுக்கு உட்பட்ட பீமநகர் ஹீபர் ரோட்டில் தார் சாலை அமைக்க கோரியும், 21-வது வார்டில் பராமரிப்பின்றி இருக்கும் பயணிகள் நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலெக்டர் ராஜாமணியிடம் மனு கொடுத்தனர்.

மக்கள் உரிமை மீட்பு இயக்கத்தின் செயலாளர் ரம்ஜான் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், மாநகராட்சிக்குட்பட்ட 20-வது வார்டில் செயல்படாமல் உள்ள நூலகம், ஆரம்ப சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகரத்தில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். துவாக்குடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் துவாக்குடிமலை கிளை செயலாளர் சாத்தையா கலெக்டரிடம் கொடுத்த மனுவில், துவாக்குடிமலை அண்ணாவளைவு அருகே மீண்டும் பொது குடிநீர் குழாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மேற்கண்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ராஜாமணி தெரிவித்தார்.

தீபாவளியன்று திருவளர்ச்சோலை அருகே உள்ள காவிரி ஆற்றில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி விமானநிலையம் வள்ளுவர் நகரை சேர்ந்த நண்பர்களான ஆண்ட்ரூஸ், இஸ்மாயில், சாகுல் ஹமீது, சிவகுரு ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கு இதுவரை அரசு இழப்பீடு ஏதும் வழங்கவில்லை. இதனால் அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அரசு இழப்பீடு வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். ஆனால் அந்த மனுக்களில் தேவையான ஆவணங்கள் இணைக்கப்படவில்லை. அந்த ஆவணங்களை வாங்கி வாருங்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன் என்று அவர்களிடம் கலெக்டர் ராஜாமணி தெரிவித்தார்.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனி கழிப்பறைகள் உள்ளன. ஆனால் அந்த கழிப்பறைகளுடன் இணைக்கப்பட்டுள்ள “செப்டிங் டேங்குகள்” நிறைந்ததால் கழிப்பறைகள் நேற்று திறக்காமல் பூட்டி கிடந்தன. இதனால் மனு கொடுக்க வந்த பொது மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.


Next Story