சிறுநீரகம் பாதிப்படைய வாய்ப்புள்ளதால் உப்பு நீரை சுத்திகரித்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


சிறுநீரகம் பாதிப்படைய வாய்ப்புள்ளதால் உப்பு நீரை சுத்திகரித்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 18 Dec 2017 10:45 PM GMT (Updated: 2017-12-19T02:49:38+05:30)

சிறுநீரகம் பாதிப் படைய வாய்ப்புள்ளதால் உப்பு நீரை சுத்திகரித்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொடுக்கப்பட்ட 158 மனுக்களை பெற்றார். பின்னர் இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

குன்னம் தாலுகாவிற்கு உட்பட்ட பெருமத்தூர் அருகேயுள்ள கிளியூர் கிராம மக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றிலிருந்து பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரானது அதிக உப்புத்தன்மையுடையதாக இருக்கிறது. இதனால் மக்களுக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அந்த நீரை பரிசோதனை செய்து நவீன எந்திரம் மூலம் சுத்திகரித்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். அப்போது உப்புத்தன்மையுடைய நீர், சுத்திகரிக்கப்பட்ட நீர் ஆகியவற்றை தனித்தனியாக பாட்டிலில் கொண்டு வந்து அவர்கள் கலெக்டரிடம் காண்பித்து பாதிப்புகளை விளக்கினர்.

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருகேயுள்ள எம்.ஆர்.எப். தனியார் டயர் நிறுவனத்தில், வெளியிலிருந்து கொண்டு வரும் உணவு பொருட்களை சாப்பிட அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்து ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று நிறுவன ஊழியர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

அப்போது கலெக்டர் அலுவலக பிரதான நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெரம்பலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், இன்ஸ்பெக்டர் தேவராஜ் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி குறிப்பிட்ட சிலர் மட்டும் உள்ளே சென்று கோரிக்கை குறித்து மனு கொடுக்குமாறு அறிவுறுத்தினர்.

இதையடுத்து ஊழியர்கள் 15 பேர் உள்ளே சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து எம்.ஆர்.எப். நிறுவனத்தில் பணியாற்றுகிறோம். சில நேரங்களில் வீட்டிலிருந்து சாப்பிட்டு விட்டு வர முடிவதில்லை. இதனால் வெளியில் உணவு பார்சல் வாங்கி கொண்டு உள்ளே வைத்து சாப்பிட அனுமதி மறுக்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எங்கள் தொழிலாளி ஒருவர் உணவு கொண்டு வந்த போது அதனை காவலாளி பிடுங்கி வைத்து கொண்டு அவமானப்படுத்தினார். இது மனித உரிமையை மீறிய செயலாகும். எனவே, வீட்டிலிருந்து எடுத்து வரும் சாப்பாட்டை கேண்டீனில் வைத்து சாப்பிட அனுமதிப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த கூட்டத்தில் திட்ட இயக்குனர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) ஸ்ரீதர், தனித்துணை கலெக்டர்(சமூக பாதுகாப்பு திட்டம்) மனோகரன், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) உமாமகேஸ்வரி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்-தணிக்கை) பாலன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story